மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

எப்படியானாய் நீ?

எப்படியானாய் நீ?

நீயும் நானும் வாழ்ந்தோம்

அந்த கணங்களில்...

நீ பிணங்கினாய் கோபித்தாய்

வணங்கினாய் வாதிட்டாய்...

கடல் பரப்பில் நீயும் நானும்

கைகோர்த்து சிரித்ததும் ...

என் வாகனத்தில் உன் பிடிப்பு

என் இடுப்பாய் இருந்ததும் ....

பகலில் நம் சந்திப்பென்றாலும்

இரவெல்லாம் நான் விழித்ததும்...

உன் சுமையெல்லாம் நான்

உணர்ந்து பகிர்ந்ததும்....

சட்டென்று உன் தந்தைக்காய்

உன் முடிவை மாற்றி ....

உன் மணப் பத்திரிக்கையை

என்னிடம் கொடுத்தபோது ....


உணரவில்லையா நீ ஒரு

கொலை செய்தாய் என்று ....

:::நாகராஜன்:::

உணர்வுகள்....

உணர்வுகள்....

கைகள் கிறுக்கியதெல்லாம்
கவிதையாய் தோன்றும்போது
உணர்வீர் காதல் வயப்பட்டதை...

ஊரோரம் ஒற்றையாய் போகையில்
நாலு பேர் அடித்தால் உணர்வீர்
அவள் வீட்டில் அறிந்ததை...

நான்கு மாத தாடியும் கையில்
கல்யாணியும் இருக்கையில்
உணர்வீர் காதலில் தோற்றதை...

கையில் மணப் பத்திரிகையும்
எதிரே கண்ணீருடன் அவளையும்
காண்கையில் உணர்வீர் இறந்ததை..

:::நாகராஜன்:::

அநாதை...

அநாதை...

பாடையில்லை பல்லக்கில்லை
புரண்டழுவார் யாருமில்லை...
நாக்கு துருத்தி நடனம் ஆட
அரை நிஜார் ஆட்களில்லை..
வழியெல்லாம் இறைத்துப் போக
கூடை நிறையும் பூக்களில்லை ..
நாராயணின் தெய்வீக சப்தம்
சங்கு இல்லை சேகண்டியில்லை...
வீதிவரை தலைவிரித்துக் கதற
தெருப் பெண்டிர் ஒருவருமில்லை...
நார் சுற்றிய புதுச் சட்டியில்
புகையும் தீக் கங்குகளுமில்லை...
தோள் கொடுத்து தூக்கிச் செல்ல
தமையன் தாயாதி யாருமில்லை ...
தலையாரியின் தலைமையில்
நாராயணக் கொள்ளியாம்...
பிள்ளையோ பெண்ணோ பிறக்காமல்
வாழ்ந்து முடித்த மூதாட்டிக்கு ...
கடைசி நிமிட கிராமத்துப்
பயணம் இதுதான் என்பதறிவீரோ?

:::நாகராஜன்:::

நாவிதன்....

நாவிதன்....

மாதத்தில் ஓர் நாள் ஒதுக்கலாச்சு
மறைக்கும் முடியைச் சிரைக்க...

கிராமத்து நாவிதன் கடையது
விவரிக்க ஒரு அவசியமுமில்லை

ஒற்றை நாற்காலி கால் உடைந்து
தகரம் சுற்றி ஆணியடித்து கட்டப்பெற்று...

சணல் கட்டி தொங்கும் கண்ணாடி, ரசம்
போன இடம் பூகோள வரைபடத்தை நினைவூட்டி..

வெட்டிப் பேச்சாளர் தினசரி குண்டி
பொருத்தி குழிந்து போன நீள பெஞ்ச்சு..

சுவற்றில் சாவித்ரியின் சாயம் போன படம்
இல்லை மலைப் பாதை, மலை ஓடை ஓவியம்

அறை குறை ஆடையில் நடிகையின்
புகைப்படம் போன வருச காலண்டர்...

ஓரமாய் ஊதுவத்தி சொருகிய சுவர்
குழி புகை பட்டு வட்டமாய் கருத்து...

தவறாமல் தந்தியும் முரசும் கசங்கி
பெஞ்ச்சு மேல் பக்கங்களாய் பிரிந்து

தினசரி செய்தித்தாள் படிக்க வரும்
சனம் அரசியல் விவாதித்து பிரியும்

முடி சிரைக்க வருபவன் சேவகனாய்,
நாவிதன் உரைக்கும் மொழிகள் பதிவுகள்

குடும்பம் பற்றி விசாரிப்பு வெளியூர்
வேலைக்குப் போன தம்பி குறித்து கேள்வி

மழை தவறியதில் விசனம் நடிகையின்
கிசுகிசு அமெரிக்க போர் பற்றிக் கரிசனம்

கேள்வி கேட்டும் பதில் சொல்லியும்
மாளாமல் கூடவே கத்திரி சரியாய் செலுத்தி...

முகம் முழுதும் துடைத்து பிடி பொடி அப்பி
முன்னும் பின்னும் கண்ணாடி காட்டி

நாற்காலியில் அமர்ந்தவனை சிரித்து
வெளியே அனுப்பி அடுத்து அமர்பவனிடம்

கூடுதல் சேவை தாடி மழிக்க அஞ்சு
ரூபாதான் என வியாபார யுக்தி பலிக்காமல்...

இன்றைய நாளின் வருமானம் நாலு
பத்திரிக்கைக்கும் ஐந்து ஓசி காப்பிக்கும் ...

கொடுத்தது போக ஜேப்பில் மிச்சமானது ரூவா
எட்டு மாத்திரம் சில்லறையாய் குலுங்கும்...

இனி என்ன சொல்லி செட்டியாரிடம் அரிசி
இரண்டு படி கேட்கலாம் என மனசில்

கேள்வி வருகையில் அனாவசியமாய்
ஞாயிறு காலையில் கூட்டம் வரும் என நினைப்பும்...

செட்டியார் அரிசி கொடுத்தால் பின்னே எட்டு
ரூபாயில் நாலு ராயல் பூடான் வாங்கிப்

பார்க்கலாமோ எனும் நினைப்பையும் தவிர்க்க
முடியவில்லை நாவிதனால்...

:::நாகராஜன்:::

உனக்குத் தெரியாதா?

உனக்குத் தெரியாதா?

விழியோரம் உன் வெறுப்பு
நகையில்லை ஓர விழிப்பில்லை ...

பாதம் சுற்றி மண்ணில்
வட்டமிடவில்லை ...

கடிதமில்லை தூது போக
ஒரு பொடியனுமில்லை...

பேருந்தில் நீ காலி செய்த
சூடான இடத்தில் நான்...

உன் கூந்தல் உதிர்த்த மலர்
என் பூஜை அறையில் ...

நீ அறியாமல் திருடிய ஒரு ஜோடி
செருப்பு தலையணை கீழ்

நீ மணி பார்க்க தேவையின்றி நான்
உன் வீட்டு வாசல் முன் தினமும் ....

மழிக்காத என் மூன்று மாத முடி
கைகள் கிறுக்கிய தமிழ் வரிகள்....

இன்னும் என்னடி வேண்டும்
என் காதலைச் சொல்ல சாட்சியாய் ....

:::நாகராஜன்:::

ஏமாற்றம்...

ஏமாற்றம்...

ஏதோ ஒரு இரவில்
என் கனவில் வருவாள்...

நிஜம் தொட்டு உணர்த்தி
மடியில் கரைவாள்....

தன் துன்பமனைத்தும்
என்னிடம் கொட்டுவாள்...

தான் வாழவில்லை எனக்
கதறி வழி கேட்பாள்...

என் ஆறுதலுக்காக
வாழ்வதாய் அவள் கூற

கண் விழிப்பேன் உடனே ....
காதலியைத் துறந்து

வேறொரு பெண்ணை
மணந்த நான்...

:::நாகராஜன்:::

7 ஜன., 2009

சிலேடைக் கவிதை - கலைஞரும் சிவனும்.....

சிலேடைக் கவிதை - கலைஞரும் சிவனும்.....

அப்பன் ஏகன் தென்னாடுடைத்தவன் மகன் கொம்பன் தாரம் பலவுண்டு
மஞ்சளுடை உடுத்து நாற்காலி மேலமர்ந்த நாயகா தயாநிதியைக்
கைவிடாத மனமே அழகிரியை வலம் வந்தால் விரும்பியதைத் தரும்
கனிமொழி உடையோன் கேள் கலைஞரும் கயிலை நாதனுமொன்றே....

:::நாகராஜன்:::

2 ஜன., 2009

திருநெல்வேலி சாராயக்கடை..

திருநெல்வேலி சாராயக்கடை..

அது சரி சும்மா ஒக்காரும்வே
எனக்குந்தேன் நிறைய சோலியிருக்கு ...

எங்க விட்டேன் சொல்லு... ஆஹ்ந் ...
அடுத்த வீட்டுக்காரி சொம்மா ஜில்லுனு

வேணாம் வுடு என்னாச்சு ஒம்ம ரவுசு..
கவுத்துட்டீங்கலாமிள்ளே சகலே...

ஒமக்கு மச்சமய்யா ஒடம்பெல்லாம்....
தம்பி அண்ணாச்சிக்கு ஒரு ஆம்லெட் போடு...

நெசம்மா சொல்லுவே நீர் மச்சினியெக்
ஓரங்கட்டுறீராமில்ல பயலுவ சொன்னாங்கல்ல...

அப்பாலப் பாக்காதீரும் வே எடுவட்ட
பயலுவளெல்லாம் நம்மளதேன் வெட்டுரானுவ..

என்ன சொல்லுறீக.. நெல்லு மூட்டைக்கு
நானூறு ரூவாக் குடுத்தானாவுகளா?

தம்பி இங்கிட்டு ஒரு கிளாசு தண்ணி
வெப்பியளா ..அண்ணாச்சிக்கு விக்கிதில்ல?

தம்பி எம்புட்டு துட்டு ஆச்சி? ஒரு நெப்போலியன்
சின்ன குப்பி நாலு சோடாத் தண்ணியும்

வெள்ளென போகணும்ண்ணே வெறுஞ்சிறுக்கி
வெளிக்கதவ தாப்பாப் போடறதுக்குள்ள .....

:::நாகராஜன்:: :

பட்டம்....

பட்டம்....

காற்றில் ஆடும் வானின் வர்ணமாய்
கடல்புறத்து கவிதையாம் காற்றாடி .....
வித வித வடிவமாய் மெருகேற்றி
கண்ணாடி பதித்த பருத்தி இழை... ...

சில பறக்கும் சில சுழலும் மேலும்
சில அறுந்து எங்கோ மிதக்கும் ......
பட்டம் என்பது சிறுவரின் மகிழ்ச்சி
சட்டமா என்ன அவர் மட்டும் மகிழ....

பட்டம் விடுதல் ஒரு திருவிழாவாகும்
ஆடி மட்டுமல்லாது அனைத்து காலமும்....
காற்றாடி பறக்கையில் பரபரக்கும் மனசெல்லாம்
ஊற்றாய் எழும் உற்சாகம் உடலெல்லாம்....

கஞ்சி காய்ச்சி ரத்தம் வர கண்ணாடி அரைத்து
மாஞ்சா பிடித்து கையால் நூலிலேற்றி
அடுத்தவன் பட்டம் அறுக்கும் வரை யாரும்
தடுத்து நிறுத்தாத வெறியே வெற்றியாகும்....

விடுமுறை நாளில் தவறாமல் நடக்கும்
பட்டம் விடுதல் பருவம் தோறும், கதறி
கழுத்தறுந்து விழுந்தவனைக் காணும் வரை
நிறுத்தவில்லை யாரும் பட்டம் விடுவதை.....

:::நாகராஜன்::::

பல்லி விழும் பலன் .....

ஒரு வார விடுமுறை நாள் விதியை

மாற்றி அமைத்தது ஒரு பல்லி ....

வெள்ளி காலை தரையில் பத்திரிகை

விரித்து வெள்ளெழுத்துக் கண்ணாடியில்

பொடி எழுத்துகள் பெரிதாய் தெரிந்த

மாத்திரத்தில் பொட்டென்று ஒன்று

தலை மேல் விழுந்தது உணர்ந்தேன்

தத்தித்தாவி ஓடியது ஒரு பல்லி....

பூனை குறுக்கே போனாலே வீடு திரும்பி

தண்ணீர் அருந்தி அமர்ந்து போகும் நான்...

பல்லி விழுதல் பெரிய சகுனமச்சே விடுவேனா

அத்தனை சீக்கிரம் எடு பஞ்சாங்கம்...

அலறியபடி என் அடுக்கிழத்தியும்

அலறாமல் ஆளைக்கொல்லும் பெரியபெண்ணும்

(அடுக்கிழத்தி - வேலைக்குப் போகாத வீட்டு மனைவியின் சரியான தமிழ் பெயர்)

உடனடி உதவிக்கு ஓடி வந்தாலும்

பல்லி விழும் பலன் முன்னேயே அறிந்த

என் மனைவியின் அலறல் காரணம்

தலையில் விழுந்தால் உடனே மரணம்

என் முதல் பயம் எப்படி இறப்பேனென்று

பேருந்து விபத்தா, விஷ ஆகாரமா

கத்திக் குத்தா இல்லை தண்ணீரில் மூழ்கியா

நோய் வந்தா வராமலா நீரா நெருப்பா

மனம் தயாரானது விதியை சந்திக்க

எதற்கும் துணிந்தேன் எதிர்கொள்ள...

பேருந்தை தவிர்த்தேன் நடைபாதை உள் நடந்தேன்

கண்ட உணவுகளை உண்ணவில்லை

குடிநீர் காய்ச்சியது மட்டும் வெளியுணவு

வீட்டிற்க்குள் அனுமதியில்லை

இருட்டியபின் ஒற்றைக்கு வராமல்

வெளிச்சத்திலேயே வீடு திரும்பினேன்

வார விடுமுறைகளில் ஊர் சுற்றல் இல்லை

கடற்கரை இல்லை சுற்றுலா இல்லை

கோவில் இல்லை குளம் இல்லை, இதன் முன்

அறியாத புதிய மருந்துகள் சட்டையில் அவசரத்திற்கு

மாதம் ஒன்றானது பல்லி சொன்ன பலன்

கிட்டே வர விரும்பவில்லையா?

எதிர் மறையாய் ஏராளமான விளைவுகள்

தினமும் நடந்ததால் உடல் பதவிசானது

உணவு கட்டுப்பாட்டில் கொழுப்பு குறைந்தது

நேரக் கட்டுப்பாட்டில் பணியில் ஊதிய உயர்வு

பேருந்து தவிர்த்ததால் பயணச்செலவு மிச்சம்

வெளிச்சுற்று தவிர்த்ததில் பல மடங்கு லாபம்

பல்லி விழுந்ததில் பலனடைந்தவன் நான்

இனி பல்லி விழுந்தால் பலன் பார்க்கலாமோ?

வீட்டு தாழ்வார ஓரம் ஒரு சிறிய எலும்புக்கூடு

நடக்கையில் என் காலில் மிதி பட்டது

என் மனசு வேகமாய் சொல்லிக்கொண்டது

இது அதாக இருக்காது என்று...

:::நாகராஜன்:::

புத்தாண்டு வாழ்த்துகள்....2009

புத்தாண்டு வாழ்த்துகள்....

நல் நினைவுகள் நல் நண்பர்கள்
நலம் விரும்பிகள் நலம் வாழ
நன்னாளில் நான் நாடும்
நாராயணன் நல்லாசியுடன்

:::நாகராஜன்:::

அப்பாவின் கைத்தடி.....

அப்பாவின் கைத்தடி.....

பலத்த மழையில் ஒதுங்கும்போதோ
ரயிலில் ஒற்றைக்கு பிரயாணிக்கையிலோ
தொடர்ந்து படிக்காமல் விட்டுப்போன
கதை போல அப்பாவின் நினைவுகள் வரும்...


அடித்தது முதலில் நினைவு வரும்
வெறுத்ததும் அழுததும் நினைவு வரும்
யோசிக்கையில் நாம் செய்த தவறு தெரிகையில்
அப்பாவின் மேல் பரிதாபம் வரும்.....

பள்ளிக்குக் கட்டணம் கட்ட கடைசி நாள்
இன்னும் இருந்தும் முன்கூட்டியே கட்ட
நிர்பந்தித்தது நினைவு வரும்....ஒரு நாளும்
எப்படி சமாளித்தாய் எனக் கேட்காததும் நினைவு வரும்...

கூடப் படித்தவன் போன கல்லூரியே வேண்டும்
என உன் வலியறியாமல் பிடிவாதம் செய்ததும்..
ஊரிலுள்ள கல்லூரி விட்டு ஒரு வண்டி தூரம்
யாத்திரை செய்து கல்வி கற்கச் சென்றதும்...

கல்லூரிச் சுற்றுலாவிற்கு காசு கேட்டு எழுதியபோது
நீ படும் கஷ்டம் அறியாமல் நான் கோபித்ததும்....
பதிலுக்கு நீ எதை விற்றாய் என்பதும் அறியாமல்
நான் உன் பணத்தை தண்ணியடித்து செலவழித்ததும்..

வெளியூரில் வேலைக் கிடைத்ததும் என்னோடு
தங்க நீ விரும்பியது புரிந்தும் ஒற்றையாய் நான்
நகரத்தில் சகல பாக்கியங்களோடு வாழ விரும்பி
உன்னிடம் நான் சொன்ன பொய்களை நீ நம்பியதும்...

உன்னை விட வசதி கூடிய பெண் வீட்டார்
என்னை மணம் பேச வந்தபோது, சற்றே
யோசிக்க நீ சொன்னதை, உன் பொறாமையாய்
எடுத்துக்கொண்டு பிடிவாதமாய் மணந்ததும்...

மாமனார் வீட்டில் மேல் படிப்பு படிக்க வைத்து
மச்சு வீட்டு மேல் மாடி எனக்காய் ஒதுக்கியபோதும்
உன்னை என் அருகில் வைத்துக்கொள்ள எனக்கு
ஒருபோதும் நினைவு வரவில்லை என்பதும்...

வாரம் தவறாமல் நீ எனக்கு கடிதம் எழுதியதும்
வருஷம் ஒருமுறை நான் பதில் எழுதியதும் .....
என்னை பார்க்க விரும்பியபோதெல்லாம் நான் வேண்டாமென
உனக்குச் சொன்ன ஆயிரம் காரணங்களும்...

அம்மாவின் சிதைக்கு கொள்ளி போட்டபின்
பாக்கியுள்ள நாட்கள் என்ன செய்யபோகிறாய் என
உன்னை நான் கேட்காமல் போனதும், நான்
கேட்காமலேயே கிராமத்தில் தங்க காரணங்கள் நீ சொன்னதும்...

யாரோ ஒருவன் என் கைபேசி எண்னைத் தேடியெடுத்து
நீ இறந்ததை சொன்னபோது, என் வெளி நாட்டு விசா
பிரச்சினைகளால் நாலு நாள் கழித்து வந்தபோது
உன் உடலை யாரோ அடக்கம் செய்ததும்....

பலத்த மழையில் ஒதுங்கும்போதோ
ரயிலில் ஒற்றைக்கு பிரயாணிக்கையிலோ
தொடர்ந்து படிக்காமல் விட்டுப்போன
கதை போல அப்பாவின் நினைவுகள் வரும்...

கூடவே எப்போதோ நீ என்னிடம் கேட்டும்
நான் வாங்கித்தராத கைத்தடியும் நினைவிற்கு வரும்...
நீ மறைந்த பின் உன் படத்திற்குக் கீழ் உள்ள
கைத்தடியைப் பார்க்கையில் தினமும் அழுகையும் வரும்...

:::நாகராஜன்:::
இந்த வருஷம்.......


சந்திரனின் காலை இந்தியன் தொட்டதும்
ஒற்றை அடிக்கு பத்து விண்கலம் விட்டதும்..

அணு ஆயுதம் வெடிக்காமல்
கட்சிகள் அடித்துக் கொண்டதும்...

ஒற்றை வெடியில் ஒலிம்பிக்ஸில்
தங்கம் வென்றதும்...

அமெரிக்காவில் மெத்தப்படித்த வித்தக மந்திரி
இந்தியனை விற்று கடனாளியக்கியதும்....

மாயாவதிக்கு கூட்டு கொடுக்காத
பொறியாளன் வெட்டப்பட்டு மாண்டதும் ....

யாரோடும் சேராத கணினிக்கூட்டம் மொத்தமாய்
ரோடோரம் போய்ச் சேர்ந்ததும்...

அதிசயத்தில் அதிசமாய் பெட்ரோல் விலையை
அரசியல் செய்யக் குறைத்தும்....

தன்மான கம்யுனிஸ்டுகள் தம் கொள்கை மறந்து
அம்மாவின் கால்களில் விழுந்ததும்...

மானம் பொயக்கக் கோரியும் செவிசாய்க்காத
வருணன் பெய்யெனப் பெய்ததும்...

தமிழ் நாட்டைச் சூறையாட பங்காளிகள் எல்லாம்
கூட்டு சேர்ந்தது தொலைக்காட்சியில் சிரித்ததும்...

மின்சாரம் இல்லாமல் விசைத்தறி கூடம் மூடி
நெசவாளன் எலிக்கறி தின்றதும்....

சிறுபிள்ளைகள் பத்துபேர் மும்பையில் இறங்கி
இருநூறு பேரின் மனிதக்கறி தின்றதும்....

போதுமடா சாமி இந்த வருஷ விஷயங்கள்...
போனவருஷம் நடந்ததெல்ல்லம் மறந்தே போச்சு...

புது வருஷ வரவிற்கு முனியப்பா சாமிக்கு
கிடா வெட்டி சாராயம் காய்ச்சி கும்பிட்டாச்சு...

புதிய வருஷத்தில் எல்லாம் நல்லதே நடக்கும்
சாமியாடி குதித்து குதித்து சொல்லியாச்சு...

:::நாகராஜன்:::

ஞானம்...



கடவுளைக் கேட்டேன்.. புதிய
காலணிகளை தா என்று..

கடவுள் கூறினான் ... என்னிடம் உன்னைப் போல
வேண்டுதல் இல்லாதவன் கால்களைப் பாரென்று...

எனக்குப் புதிதாய் ஞானம் வந்தது...

:::B. நாகராஜன்:::

ஏதடா வீரம்?

ஏதடா வீரம்?

சமாதானப் புறாக்களுக்கு முன் துப்பாக்கிப் பிடிப்பதா வீரம்?

பசியென்றால் எதிரியின் குழந்தைக்கும் என் தாய் முலைப்பால் கொடுக்கும் நாடடா இது..

இறந்தவனின் பிள்ளை கூட கொன்றவனை சந்தித்து பூங்கொத்து கொடுக்கும் தேசமடா இது..

உன் நாட்டில் பூகம்பம் வந்தபோது தன் வீட்டு உலையை அனைத்து உனக்குணவு அளித்தவன் பூமியடா...

புத்தனும் காந்தியும் என்னைப் படிப்பித்த சத்தியம், என்னைக் காக்க அல்ல, உன்னை என்பதை புரிந்துகொள்..

ஒன்றை விதைத்தால் வளர்வது ஆயிரம் ஆயிரம் பயிர் மட்டுமல்ல வீரனின் உயிரும் கூட..

பற்றியெரியும் கட்டிடமும் உயிர் விட்டுப் போன உடல்களும் காணும்போது என் பல்லாயிரம் காலத்து நாகரிகம் மறந்து
மொழி மறந்து, தமிழ் மறந்து, கற்றது மறந்து உன்னை திட்டத் தோணுதடா.... தேவிடியாப் பசங்களா..

நாகராஜன்


__,_._,___

வா இங்கே இயற்கையே…வர்ணம் தீற்றக் கற்றுக்கொடு...

வா இங்கே இயற்கையே…வர்ணம் தீற்றக் கற்றுக்கொடு...

தங்கத்தை உருக்கி ஜுவாலையைக் குளிர்த்தனுப்பு
வானவில்லை வளைத்து வழியில் கிடத்து
வானக் குழம்பை பாத்திரத்தில் குழைத்து
காற்றுத் தூரிகையால் தரையில் வார்த்து
தீற்றிய நீலத்தை வைத்துப் பார் ஓர் புள்ளியில்
அருவிகள் முழுவதும் சரிகையாட்டும் வெள்ளியில்
புல்லெல்லாம் பசுமையாய் வெளியெல்லாம் புல்வெளியாய்
வளர் பிறையை தரையில் உரைத்து மலைஎங்கும்
வெள்ளையடி தேய் பிறையை சந்தனம் சேர்த்து
தரையெல்லாம் மஞ்சள் பூசு புற ஊதா கதிரெல்லாம்
கத்தரிப்பூ வரிசையாய் கோடிட்டு நிறமாக்கி
கொட்டி கொடுக்குது பார் இயற்கை இங்கே, வார்த்தைகள்
விவரிக்க தடுமாறும் வர்ணங்களை ஓர் கவிதையாய்…

:::நாகராஜன்:::

நொறுக்குத் தீனி.....

நொறுக்குத் தீனி.....

தீனிக்குப் பஞ்சமில்லை படிக்கும் காலத்தில்..
தேவைக்கும் மேல் வகையாய் கிடைக்கும்
வித்யாசமாய் வித விதமாய் கால மாற்றம்
ஒத்து ஒரொரு பொருளும் இனிய அனுபவம்...

வெல்லம் தேங்காய்ப் பூ சேர்த்த கமர்கட் உருண்டை
வெள்ளை நிறம் பூண்ட உப்பு/சீனிப் பணியாரம் சூடாய்
வெள்ளை முடி கிழவி விற்கும் வேகவைத்த குச்சிக் கிழங்கு
தள்ளு வண்டியில் பேர் தெரியாத புளித்த பச்சை நிறப் பழம்

சில நேரம் புதியதாய் சந்தைக்கு வரும் சிவப்பு மிட்டாய்
பெண் பிள்ளைகள் மிக விரும்பும் புளிப்பு ஆரஞ்சு கிளிப்பு
பச்சை புளியங்காய் எலந்தைப் பழம் நாவல் பழம் தேங்காய் பத்தை
உப்பு பொடி தூவி பற்களாய் சீவி விற்கும் மாங்காய் பத்தை...

எலந்தை வடை ஜியோமிதிப் பெட்டியிலிருக்கும்...
பழமும் பச்சை மிளகாயும் கலந்தரைத்து உப்பிட்டு
வடை தட்டி உலரவைத்துப் பின் முப்பது நாள் உண்ண...
எடைக்கு எடை சமமில்லை தங்கமானால் கூட....

விடுமுறை நாளில் நொறுக்கு தீனிக்காய் மனம் ஏங்கையில்
எடுத்தாள இருக்கவே இருக்கு புளியும் உப்பும் மிளகுப்பொடியும்
கலந்தெடுத்து கையில் உருட்டி குச்சியில் நட்டு கொஞ்சம்
கொஞ்சமாய் வாயில் உருட்டி நக்கியபின் ஊறும் எச்சில் விழுங்கி

சமையல் அறை நொறுக்குத்தீனிக்கு ஓர் வரப் பிரசாதம்
பொட்டுக் கடலையும் வெல்லமும் அல்லது பிடி அவலும்
இல்லையேல் கடலையுடன் தேங்காய் சேர்த்து உடனடி சட்னி
வாயில் அரைக்க ஏதுவாய் உடன் தின்னத் தோதாய்...

போதும் போதாததிற்கு வழியெல்லாம் இருக்கு யார் வைத்த மரமோ...
புளியங்காய் பழம் கோணல்புளி இல்லை கொய்யாவோ மாங்காயோ..
குறி பார்த்து கல் எறியத் தெரிய வேணும் ஆள் வந்தால்
எகிறி குதித்து ஓடத் தெரிய வேணும்...எத்தனை வித்தை இது?...

பசித்தபோது புளியடித்து தோட்டக்காரன் விழித்தபோது கிலியடித்து
கொய்யாவோ மாங்காயோ வெட்டுவதற்கு கத்தி வேண்டாம்
கையிலெடுத்து நல்ல தரையில் ஓங்கிக் குத்தினால் போதும்
இரட்டையாய் பிளந்து வடிவில்லாப் பத்தைகளை ருசித்து...

கிழவி விற்ற குச்சிக் கிழங்கில் தரம் பார்க்கவில்லை
பழம் மேல் மொய்த்த ஈக்களை கணக்கெடுக்கவில்லை
பெட்டிக் கடை மிட்டாயின் மேல் FDA முத்திரையில்லை
பற்றவில்லை எந்தப் பிணியும் ரோகமும் எமக்கு இதுவரை ....

நொறுக்குத்தீனி சரிதம் எமக்கு விட்டுச்சென்றது நினைவெனும்
நறுமணங்களை.. நினைக்கும்போதெல்லாம் இனிக்கும் கணங்களை
ஒரு விடுமுறை நாளில் பழையதை நினைத்து மகிழ்வுடன்
அசைபோட சில தடங்களை பதித்துச் சென்றது நொறுக்குத்தீனி....

பள்ளி விட்டு வந்த மகனிடன் பரிவுடன் கேட்டேன் அவன் உண்டதை....
வெளிநாட்டுப் பள்ளி, நொறுக்குத்தீனிக்கு வசதியில்லை... கொஞ்சம்
நூடுல்ஸும் பிஸ்ஸாவும் உச்சிக்கு உண்டேன் என்றான்... அவனதை
உண்டதால் எனக்குக் கிடைத்தது மண் மனத்துடன் இக்கவிதை..

:::நாகராஜன்::::

காதல் காலம்....

காதல் காலம்....

நகம் கடித்து மணல் மேல் கோலமிட்டு கண் முன்
வரிசையாய் வந்து போவோரில் கவனம் வைத்து
மணி பார்த்து சிறுவன் விற்ற கடலை கொறித்து
விழிகளில் உன் உருவம் நிறுத்தி வழியெல்லாம்

கண் பதித்து நீ வரும் வரை பசித்திருந்து
வந்ததும் வழக்கிட்டு ஓய்ந்து நீ சொன்ன
காரணம் புரிந்தும் ஏற்காமல் உன் கண்
உகுக்கும் நீர் மட்டும் என்னை அமைதிப் படுத்தி

சமாதானமாகிப் பின் உன்னை முத்தமிட்டு
உடல் உணர்ந்து நீ உன் வழி நான் என் வழி….
எத்தனை இன்பமிருந்தது கண்ணே காதலில் …
இன்று நான் உனக்காக காத்திருக்கவில்லை…

நீயும் நான் வரவில்லை என்று உறங்காமலில்லை …
அடுப்படியில் குளிர்ந்த சமையல் எனக்காய் காத்திருக்க…
நானோ எங்கோ ஓர் உணவகத்தில் பசி தனித்துப் பின்
படுத்துறங்க மட்டும் கட்டிலில் காலியான இடத்தில்….

ஒருபுறம் என்னை நிரப்பி உறக்கத்தில்
உன் கை என் மேல் விழுகையில் புறம் தள்ளி
மறைக்க முடியாமல் உருளுதடி நான்
உகுக்கும் கண்ணீர் காதலை எண்ணி .....

:::நாகராஜன்:::

கனவு கலையும்போது...

கனவு கலையும்போது...

கனவென்பது ஒரு கிறக்கம்...
நடப்பது அனைத்தும் உணர்வே...
வானில் பறப்பதும் கால் தடுக்கி
பள்ளத்தில் குப்புற வீழ்வதும்,

கடவுளைக் காண்பதும் பேருந்தை
தவற விடுவதும் விபத்தில் அடிபடுவதும்
தாயோ தந்தையோ தமக்கையோ
தம்பியோ சட்டென்று இறப்பதும்

காலம் கடந்து மறந்து போன பரிட்சை
அறைக்கு நேரம் கடந்து வருவதும்,
பரீட்சை எழுதுகையில் சமன்பாடோ
இல்லை இரசாயன விதி மறப்பதும்,

நேரே விமானம் வெடித்து விழுவதும்
முகமறியாப் பெண்ணைப் புணர்வதும்
வழியெல்லாம் பணமாய் தெருவெல்லாம்
தங்கக் காசு இறைந்து கிடப்பதும்

பொறுக்கி மாளாமல் தவிப்பதும்
விரும்பும் நடிகனுடன் விருந்துண்பதும்
ஏதோ ஒரு வீடு நம் வீடு போல் உணர்வதும்
என்றோ மறந்த நண்பன் நேரே வருவதும் ...

கனவில் அத்தனையும் நடப்பது சகஜம்...
விழித்து எழுந்ததும் தினக்கவலைகள்
குமிழாய் மேலெழுந்து கனவின் திவலைகள்
மறைந்து கடமைகள் கனவை மறக்கடிக்கும் ..

அன்றைய கனவு குறித்து சட்டென்று
நினைவு அசை போடுகையில் மனசு
கண நேரம் லேசாகி கனவுலகில் அலையும்
அந்நேரத்திற்கு இல்லை ஒரு விலையும்....

:::நாகராஜன்:::

ஜனநாயகப் பிரதிநிதி....

ஜனநாயகப் பிரதிநிதி....

காலை எழுந்ததும் தந்தி பேப்பர்
பிதுக்கி பிழிந்த பேஸ்டில் பல் துலக்கல்
காலைக்கடன் ஸிசர்ஸ் சிகரெட்டுடன்
நெஸ்கபே குடித்து குளியல் அறையில்
தன் அந்தரங்கங்களை சரி பார்த்து
வெளுத்த சட்டை வேஷ்டியுடுத்தி
நெற்றியில் வெள்ளை சிவப்பாய்
ஏதோ ஒன்று தினம் இடுவதை இட்டு
சூடாய் வேண்டும் என்றும் கோபமாய்
நாஷ்டா முடித்து கலையாமல் கை கழுவி
வெளியே நிற்கும் அத்தனை முட்டாள்களுக்கும்
ஒரு பெரிய கும்பிடு போட்டு உதவியாளனை
விளித்து இன்றைய வருமானம் குறித்து
தெளிவடைந்து வண்டி பிடித்து ஓசியில்
கோட்டை வரை சவாரி செய்து
உள்ளே உட்காரப் போகையில் தன்
தலைவன் சொன்னான் என்று வெளிநடப்பு
செய்து ஜனநாயகம் காப்பாற்றும்
நாம் தேர்ந்தெடுத்த நம் பிரதிநிதி.....

கடவுளும் கவலையும்.....

கடவுளும் கவலையும்.....

வேண்டி வணங்கி தாள் வீழ்ந்து
கவலையெல்லாம் தெரிவித்து
கஷ்டம் போக காசு யாசித்து
தேங்காய் உடைத்து பூசை செய்து
தட்டில் நிறைய காசு இட்டு
அழுக்கு வேஷ்டி தினம் உடுத்தும்
அந்தணனை சந்தோஷப் படுத்தி
கைகள் கற்பூரம் ஒத்தி நெற்றியில்
நீறிட்டு மிகுந்ததை பொட்டலம் கட்டி
கடைசியாய் சாமியை திரும்பிப்
பார்த்து ஒரு அவசர விடைபெற்று
திரும்புகையில் மனசில் நிம்மதியாய்
தோன்றும் ஒரு கணம் மட்டும்...
புதுச் செருப்பு வெளியில் அங்கேயே
இருக்குமோ என்று புதிய கவலை
தொடங்குவதை தடுக்க முடியவில்லை....

:::நாகராஜன்:::

எண்ணில் அடங்காதான் தாள் வாழ்க..

எண்ணில் அடங்காதான் தாள் வாழ்க..


பூஜ்யமொன்றாகி ஒன்றிரண்டாகி இரண்டு
மூன்றாகி மூன்று நான்காகி நான்கைந்தாகி
ஐந்தாறாகி ஆறேழாகி ஏழுமெட்டாகி
எட்டொன்பதாகி ஒன்பதும் பத்தாகி பித்தா

பிறைசூடி பெருமானே எண்ணில் அடங்காத
எந்தையே என்னில் அடங்கி முந்தை வினை முடிக்க
தந்தையாய் தாயாய் வந்தெனை ஆட்கொண்ட
நாதன் தாள் வாழ்க நமசிவாயம் வாழ்க...

ஆணும் பெண்ணுமாய் ஒன்றாகி அரியும் சிவனும்
ஒன்றாகி தலையும் பிண்டமும் ஒன்றாக்கி
நான் எனும் ஒன்றை நீ என்று ஒன்றாக்கி
பரம் பொருளாய் நின்ற ஒன்றே....

பிள்ளை இரண்டாகி பெண்ணும் இரண்டாகி
பேறும் இரண்டாகி நான் எனது எனும் இரண்டாய்
நீ உனது என்றிரண்டாக்கி நடமாடும் இரண்டு
கால் பற்றி நாடாண்டு நிற்கும் நமசிவாயமே...

முப்புரம் எரித்து முக்கண்ணுடைத்து
மூவிலை விரும்பி மூன்று சூலம் ஏந்தி
முப்பிறப்பு அறுத்து மூன்று குணமாகி
மூன்று பிள்ளை பெற்ற பிரானடி சரணம்...

நான் மறையும் நானிலமும் நாற்தோளில்
நீ சுமந்து நான் உன்னடி சேர நாலாயிரம்
காதம் கடந்து நாற்திசையும் உன்னை
நான் தேடும் பித்தா பெருமானே..

:::நாகராஜன்::::

சிலேடைக்கவிதை - சிவன் அல்லது ஆற்று நீர்

சிலேடைக்கவிதை - சிவன் அல்லது ஆற்று நீர்

கண்டவிடம் சேரும், சங்கு புரளும், அங்கெல்லாம் விரியும் இடையில் மறையும், நன்கு நோக்கில் தெளியும், பாசம் பற்றும், உடுக்கை அலக்கும், மலையும் சூழ்(ல்), மண் பூசி வளைந்தும் நெளிந்தும் நடமிட்டு, நாடாளும் பொருளே....

:::நாகராஜன்:::

ஏர் எழுபது!

ஏர் எழுபது!

ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
ஊரருகே சேர்ந்த நிலமுமாய், செய்வாரும்
சொற்கேட்டால் என்றும் உழவே இனிது.....

- ஏர் எழுபது செய்யுள்

ஏர் எழுபது என்பது தற்கால உழவு
குறித்து விவரமறியாத ஒரு உழவுப்
புலவனின் பெருமிதமான பழம்பாடல்.....

செய்யுள் கேட்ட எங்க ஊர் கிழவி
நரைமுடி கோதிச் சொன்னாள்
தம்பி உழவு பற்றி புதிதாய் எழுது....

ஏர் இருந்தது தேக்கு மரத்தில் ரெண்டு...
மாறிப் போச்சி...ஒண்ணு மணியகார் ஊஞ்சலாய்
மாணிக்கம் ஊட்டு கட்டிலாய் மற்றது

இரண்டாவது பொண்ணு வயித்துப் பேத்திக்கு
கடைசி பரீட்சைக்கு பீஸ் கட்ட அடி மாடாய்
கேரளா போனது ராமனும் பீமனும் .....

அடுத்த தெருவில் விளையாடிவிட்டு வந்த
பேரப் பிள்ளைகள் பசிக்கு கஞ்சி காய்ச்ச
வேறென்ன இருக்கு விதை நெல் தவிர....

காஞ்சிப் போன கால் ஏக்கரும் ஊர் ஓரத்தில்
கல்லு நட்டு பிளாட்டு போட்டு யாரோ வித்தாச்சு...
நல்ல புத்தி நமக்கு தோணாமல் போச்சு..

ஏர் எழுபது சொன்னது சரிதானுங்கோ..
கண்டிப்பாய் உழவு தேவையாயிருக்கு
சமயத்துக்கு விக்க உதவியாய்....

:::நாகராஜன்::::

சிலேடைக்கவிதை - தேளும் தேனும்

சிலேடைக்கவிதை - தேளும் தேனும்

கொட்டும், மெய் காக்க கொடுக்கும் உபயோகம்,
மலை மேலிருக்கும் மேலானால் விஷமாகும்
கருப்பும் சிவப்பும் நிறமுண்டு கண்ணாடியில் அடைக்கையில்
காட்சிப் பொருளாகும் 'தே' 'ளும்' 'னும்'

:::நாகராஜன்:::

சங்கீத பாஷை...

சங்கீத பாஷை...

ச ரி க ம ப த நி ஸ

மநிதா பாதக மநிதா நிசமா நீ சரி
சமமா? மதமா சம்மதமா பாசமா?
தாகமா பரிகாசமா பகரி நி
சாதகமா, பாதகமா, மநிதா?

:::நாகராஜன்:::

பேருந்து...

பேருந்து...

நீண்ட நேரம் நீண்ட வரிசையில்
நின்று ஒரு பக்கம் இடுப்பொடிந்த
வண்டி வருகையில் முட்டி மோதி
சட்டை சலவை கசங்க உள்ளே ஏறி...

அங்குல அங்குலமாய் நகர்ந்து
அரை மணி நேரம் போனபின்
மூணு பேர் சீட்டில் நாலாவதாய்
சிடுமூஞ்சியின் அருகமர்ந்து...

நனைந்த சட்டைப்பையில் ரூபாயும்
ஈரமானதோ என எடுத்துப் பார்த்து
பின் பத்திரமாய் உள்ளே வைத்து
காலியாகும் அடுத்த இடம் எதிர் நோக்கி...

மூன்று வரிசை தள்ளிக் காலியான
இடத்தை ஒற்றைத் தாவலில்
எட்டிப் பிடித்து ஜெயித்த சந்தோஷத்தில்
சுற்றும் நோக்கி கால் சற்றே விரித்து

சுகமான கோழித்தூக்கமுடன் பாக்கி
யாத்திரை முடிக்குமுன் ஒரு கர்ப்பவதியோ
இல்லை குடுகுடு கிழவியோ வராதிருக்க
மனசு பிரார்த்திப்பதை தடுக்க இயலவில்லை….

:::நாகராஜன்:::