மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

எப்படியானாய் நீ?

எப்படியானாய் நீ?

நீயும் நானும் வாழ்ந்தோம்

அந்த கணங்களில்...

நீ பிணங்கினாய் கோபித்தாய்

வணங்கினாய் வாதிட்டாய்...

கடல் பரப்பில் நீயும் நானும்

கைகோர்த்து சிரித்ததும் ...

என் வாகனத்தில் உன் பிடிப்பு

என் இடுப்பாய் இருந்ததும் ....

பகலில் நம் சந்திப்பென்றாலும்

இரவெல்லாம் நான் விழித்ததும்...

உன் சுமையெல்லாம் நான்

உணர்ந்து பகிர்ந்ததும்....

சட்டென்று உன் தந்தைக்காய்

உன் முடிவை மாற்றி ....

உன் மணப் பத்திரிக்கையை

என்னிடம் கொடுத்தபோது ....


உணரவில்லையா நீ ஒரு

கொலை செய்தாய் என்று ....

:::நாகராஜன்:::

உணர்வுகள்....

உணர்வுகள்....

கைகள் கிறுக்கியதெல்லாம்
கவிதையாய் தோன்றும்போது
உணர்வீர் காதல் வயப்பட்டதை...

ஊரோரம் ஒற்றையாய் போகையில்
நாலு பேர் அடித்தால் உணர்வீர்
அவள் வீட்டில் அறிந்ததை...

நான்கு மாத தாடியும் கையில்
கல்யாணியும் இருக்கையில்
உணர்வீர் காதலில் தோற்றதை...

கையில் மணப் பத்திரிகையும்
எதிரே கண்ணீருடன் அவளையும்
காண்கையில் உணர்வீர் இறந்ததை..

:::நாகராஜன்:::

அநாதை...

அநாதை...

பாடையில்லை பல்லக்கில்லை
புரண்டழுவார் யாருமில்லை...
நாக்கு துருத்தி நடனம் ஆட
அரை நிஜார் ஆட்களில்லை..
வழியெல்லாம் இறைத்துப் போக
கூடை நிறையும் பூக்களில்லை ..
நாராயணின் தெய்வீக சப்தம்
சங்கு இல்லை சேகண்டியில்லை...
வீதிவரை தலைவிரித்துக் கதற
தெருப் பெண்டிர் ஒருவருமில்லை...
நார் சுற்றிய புதுச் சட்டியில்
புகையும் தீக் கங்குகளுமில்லை...
தோள் கொடுத்து தூக்கிச் செல்ல
தமையன் தாயாதி யாருமில்லை ...
தலையாரியின் தலைமையில்
நாராயணக் கொள்ளியாம்...
பிள்ளையோ பெண்ணோ பிறக்காமல்
வாழ்ந்து முடித்த மூதாட்டிக்கு ...
கடைசி நிமிட கிராமத்துப்
பயணம் இதுதான் என்பதறிவீரோ?

:::நாகராஜன்:::

நாவிதன்....

நாவிதன்....

மாதத்தில் ஓர் நாள் ஒதுக்கலாச்சு
மறைக்கும் முடியைச் சிரைக்க...

கிராமத்து நாவிதன் கடையது
விவரிக்க ஒரு அவசியமுமில்லை

ஒற்றை நாற்காலி கால் உடைந்து
தகரம் சுற்றி ஆணியடித்து கட்டப்பெற்று...

சணல் கட்டி தொங்கும் கண்ணாடி, ரசம்
போன இடம் பூகோள வரைபடத்தை நினைவூட்டி..

வெட்டிப் பேச்சாளர் தினசரி குண்டி
பொருத்தி குழிந்து போன நீள பெஞ்ச்சு..

சுவற்றில் சாவித்ரியின் சாயம் போன படம்
இல்லை மலைப் பாதை, மலை ஓடை ஓவியம்

அறை குறை ஆடையில் நடிகையின்
புகைப்படம் போன வருச காலண்டர்...

ஓரமாய் ஊதுவத்தி சொருகிய சுவர்
குழி புகை பட்டு வட்டமாய் கருத்து...

தவறாமல் தந்தியும் முரசும் கசங்கி
பெஞ்ச்சு மேல் பக்கங்களாய் பிரிந்து

தினசரி செய்தித்தாள் படிக்க வரும்
சனம் அரசியல் விவாதித்து பிரியும்

முடி சிரைக்க வருபவன் சேவகனாய்,
நாவிதன் உரைக்கும் மொழிகள் பதிவுகள்

குடும்பம் பற்றி விசாரிப்பு வெளியூர்
வேலைக்குப் போன தம்பி குறித்து கேள்வி

மழை தவறியதில் விசனம் நடிகையின்
கிசுகிசு அமெரிக்க போர் பற்றிக் கரிசனம்

கேள்வி கேட்டும் பதில் சொல்லியும்
மாளாமல் கூடவே கத்திரி சரியாய் செலுத்தி...

முகம் முழுதும் துடைத்து பிடி பொடி அப்பி
முன்னும் பின்னும் கண்ணாடி காட்டி

நாற்காலியில் அமர்ந்தவனை சிரித்து
வெளியே அனுப்பி அடுத்து அமர்பவனிடம்

கூடுதல் சேவை தாடி மழிக்க அஞ்சு
ரூபாதான் என வியாபார யுக்தி பலிக்காமல்...

இன்றைய நாளின் வருமானம் நாலு
பத்திரிக்கைக்கும் ஐந்து ஓசி காப்பிக்கும் ...

கொடுத்தது போக ஜேப்பில் மிச்சமானது ரூவா
எட்டு மாத்திரம் சில்லறையாய் குலுங்கும்...

இனி என்ன சொல்லி செட்டியாரிடம் அரிசி
இரண்டு படி கேட்கலாம் என மனசில்

கேள்வி வருகையில் அனாவசியமாய்
ஞாயிறு காலையில் கூட்டம் வரும் என நினைப்பும்...

செட்டியார் அரிசி கொடுத்தால் பின்னே எட்டு
ரூபாயில் நாலு ராயல் பூடான் வாங்கிப்

பார்க்கலாமோ எனும் நினைப்பையும் தவிர்க்க
முடியவில்லை நாவிதனால்...

:::நாகராஜன்:::

உனக்குத் தெரியாதா?

உனக்குத் தெரியாதா?

விழியோரம் உன் வெறுப்பு
நகையில்லை ஓர விழிப்பில்லை ...

பாதம் சுற்றி மண்ணில்
வட்டமிடவில்லை ...

கடிதமில்லை தூது போக
ஒரு பொடியனுமில்லை...

பேருந்தில் நீ காலி செய்த
சூடான இடத்தில் நான்...

உன் கூந்தல் உதிர்த்த மலர்
என் பூஜை அறையில் ...

நீ அறியாமல் திருடிய ஒரு ஜோடி
செருப்பு தலையணை கீழ்

நீ மணி பார்க்க தேவையின்றி நான்
உன் வீட்டு வாசல் முன் தினமும் ....

மழிக்காத என் மூன்று மாத முடி
கைகள் கிறுக்கிய தமிழ் வரிகள்....

இன்னும் என்னடி வேண்டும்
என் காதலைச் சொல்ல சாட்சியாய் ....

:::நாகராஜன்:::

ஏமாற்றம்...

ஏமாற்றம்...

ஏதோ ஒரு இரவில்
என் கனவில் வருவாள்...

நிஜம் தொட்டு உணர்த்தி
மடியில் கரைவாள்....

தன் துன்பமனைத்தும்
என்னிடம் கொட்டுவாள்...

தான் வாழவில்லை எனக்
கதறி வழி கேட்பாள்...

என் ஆறுதலுக்காக
வாழ்வதாய் அவள் கூற

கண் விழிப்பேன் உடனே ....
காதலியைத் துறந்து

வேறொரு பெண்ணை
மணந்த நான்...

:::நாகராஜன்:::