மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

ஆட்டோகிராப்....:::நாகராஜன்:::

ஆட்டோகிராப்....

பள்ளியின் இறுதி நாட்கள்
துள்ளலின் பருவ முடிவில்
பாடம் படித்த இடம்
மறக்குமோ என நினைக்கையில்...

இல்லை... அதுவரை கூடப்
படித்தவனை மட்டுமே அறிந்து
பிரியும் ஏக்கம் தாளாமல்
வரிகளில் துக்கம் அடக்கவோ...

அடுத்த பெஞ்சில் அமர்ந்தவள்
ஒருவேளை ஐ லவ் யூ எழுதி
காதலை சொல்வாளோ
என எதிர் பார்த்தோ....

எதுவோ ஒன்று… ஆனால் என்ன?....
கையில் அடக்கமாய் குறு நோட்டை
பல வண்ணத் தாள்களை ஒன்றொன்றாய்
ஓடிச்சென்று நிரப்பிய நினைவுகள்...

தெரியாமல் விரல் தொட்ட லலிதா
தப்பு கணக்கிற்காய் குட்டிய வாத்தி
விளையாட்டில் அடித்த சக மாணவன்
மணி அடிக்கும் பியூன் முனுசாமி ....

இன்னும் எத்தனையோ பேர்
நாலு வரிகள் எழுதிக் கொடுத்தது...
எதையோ பரணிலிருந்து இழுத்து
எடுக்கையில் தலைமேல் விழுந்தது....

பக்கம் புரட்டுகையில் எல்லார்
நினைவும் ஊர்ந்து போனது….
ஒரொரு பக்கமும் நினைவெல்லாம்
இனித்து நிகழ் காலம் மறந்தது...

கோவிலிலிருந்து அவசரமாய்
உள்ளே வந்த மனைவி குங்குமம்
சுற்ற ஒரு தாளைக் கிழிக்கையில்
என் இதயமும் கிழிந்தது...

:::நாகராஜன்:::

பிராமணன்....:::நாகராஜன்:::

பிராமணன்....

தலை மழித்து பின்னில் ஒரு
கற்றை மயிர் மட்டும் முடிச்சுடன்
மாரில் குறுக்காய் முப்புரி நூல்
இடையில் குறுக்கு கட்டி வேட்டி....

கையில் செம்புடன் காலை நேரம்
ஆற்றில் குளியலும் சூர்ய வந்தனமும்
மதியம் சந்தியைக்கு மீண்டும் தொழலும்
காயத்ரி மந்திரம் நூறு முறையேனும்....

இடைப்பட்ட வேளையில் கையில்
வாத்தியத்துடன் உஞ்ச விருத்தி
இல்லை கோவில் கருவறையில்
கடவுளோடு சமஸ்கிருதக் கொஞ்சல்...

வெளியே பக்தனுக்கு மேலிருந்து
பிரசாதம் எறிதல் அல்லது
வேலையில்லாதபோது பத்தாவது
பிள்ளையை உருவாக்குதல்....

தட்டில் விழும் காசிற்க்காய் கூடுதல்
மந்திரம் சொலல், இல்லையேல்
அமாவாசை, தர்ப்பணத்தி்ற்கு கால் கழுவி
வாழையும் அரிசியும் பிதுர் யாசகம் பெற்று…

பிராமணனுக்குத் தெரியாமல் போனது
வேறெந்த வேலையும் வாழ்வியலும்...
வியாபாரம் தெரியாது விளம்பரம்
தெரியாது அரசியல் தெரியாது....

காலம் மாறி கலி முற்றுகையில்
பிராமணன் வாயில் பீடியும் பிஸ்ஸாவும்
அமெரிக்க வாசம் மென்தொழில், நுனி நாக்கில்
சமஸ்கிருதம் மாறி அன்னிய மொழி....

வறுமை விரட்டுகையில் கைவசம்
சமையல் தொழில், இல்லையேல்
சேட்டு வீட்டு கணக்குப் பிள்ளை
வஞ்சனையில்லாத உழைப்புடன் ...

வாங்கும் சம்பளத்திற்கு நன்றியோடு
பணிசெய்யும் க்ருஷ்ண தர்மம்....
தொழில் பயம் பக்தி எல்லாம் இருக்கும்
மோசம் செய்ய ஒருபோதும் எண்ணமில்லை

அரசாங்கம் பிராமணனுக்கு ஒன்றும்
செய்யாது.... சில நேரம் வசவும்
சில நேரம் செருப்பு மாலையும்
சில நேரம் பூணுல் அறுத்தலும்....

எந்த ஜாதியிலும் பிராமணன் இல்லை
உயர் குடி, தாழ் குடி இல்லை
இட ஒதுக்கீடு இல்லை வறுமையை
கண்டுகொள்வாரில்லை அரசாங்கத்தில்

வெறுக்கப் படுவோமோ என்று பயந்து
பூணுல் மறைத்தவனை கண்டதுண்டு...
ஆனாலும் தெருவில் பிச்சை எடுக்கும்
பிராமணனை நான் பார்த்ததில்லை...

வேறெந்த வேலையும் தெரியாத
பிராமணன் செய்வது தற்காலம் எல்லா வேலையும்…
வியாபாரம் விளம்பரம் அரசியல் எல்லாம்...
பிராமணன் பணியினை தமிழ் ஓதுவான் செய்யலாச்சு ....

ஆனாலும் இன்னும் எனக்கொரு சந்தேகம்
கடவுளுக்கும் பிராமணனுக்கும் மட்டுமே
புரியும் சமஸ்கிருத பாஷையில் பக்தன் குறையை
இனி யார் கடவுளுக்கு புரிய வைப்பார் ?

:::நாகராஜன்:::

பட்டாளத்தான்... :::நாகராஜன்:::

பட்டாளத்தான்...

விரித்த மீசையும் காக்கி உடுப்பிலும்
கையில் இரட்டைக்குழல் துப்பாக்கியும்
எண்பது கிலோ தகர டப்பவோடும்
ரயில் இறக்கியது சுபேதார் சண்முகத்தை…

கிராமம் முழுதும் அதிசயித்தது…
வீறாப்பெல்லாம் பேசினார் பட்டாளத்தார்…
பாகிஸ்தானியை சுட்ட கதையெல்லாம்
சுவாரஸ்யமாய் சொன்னார் ....

ஹிமாச்சலின் குளிரும் பூஜின் மணலும்
விவரித்தபோது கூட்டம் மொத்தம்
சிலிர்த்துப் போனது,மயிரெல்லாம் கூச்சி
நரம்பிலெல்லாம் மின்சாரம் ஊர்ந்தது ...

பட்டாளத்தான் துப்பாக்கிக்குப் பயந்து
யாரும் சொல்லவில்லை அவன்
பெண்சாதியும் முன்சீப்பும் வருமுன்
கூடிக் குலாவியதை....

::::நாகராஜன்:::

சிதம்பரம்.... :::நாகராஜன்:::

சிதம்பரம்....

நடுக்கில் முளைத்த கோவில் சுவரில்
காவியும் வெளுப்பும் வர்ணமாய்
சுற்றிலும் மாட வீதிகள், முழுவதும்
அந்தணர்களும் அம்மாமிகளும் ...
மற்றவர் நுழையத்தடை....

ஆனாலும் பாலுக்கும் காய்க்கும்
சாக்கடை கழுவவும் ஜாதியின்றி
யாவர்க்கும் உண்டு அனுமதி...
கோவிலில் சில்லறையைக் கழுவாமல்
மடியில் சுருட்டும் குடுமி பிராம்மணன்....

சித்திரையோ பங்குனியோ
கண்டிப்பாய் ஒரு பண்டிகை….
பிராமணன் பிழைக்க வேண்டாமா?
உற்சவர் வீதியில் உலா வருதலும்
மற்றவர் சாமிக்கு தேங்காய் உடைத்தலும்....

ரத சப்தமியோ இல்லை ஆருர்தோடு
தரிசனமோ இல்லை பங்குனி
உத்திரமோ இல்லை சிவா ராத்திரியோ
ஏதும் இல்லை என்றால் இருக்கவே
இருக்கு நந்திப் பிரதோஷம்...

எத்தனை இருந்து என்ன?
ஈசனை தமிழில் துதிக்க நமக்கு
கோர்ட்டின் அனுமதி வேண்டியிருக்கு...
அல்லது தலித்தின் தோளேறிப் போராட
ஒரு முதிவனும் தமிழக அரசின்
பென்ஷன் திட்டத்தில் ஒரு வயதான
தருமபுர ஆதீன சிவ பக்தனும்....

:::நாகராஜன்:::

பயம்....:::நாகராஜன்:::

பயம்....

பகலில் ஒரு தொல்லையுமில்லை!
பேயோ பிசாசோ முனியோ சனியோ
வாய்க்கு வந்ததை வெளியில் சொல்லி
தைரியவான் ஆகலாம்...
ஆனாலும் சந்தை முடிந்து
மிச்சம் கட்டி சுவேகாவில்
ராத்திரி பத்திற்கு வீடு
திரும்புகையில் இருட்டில்
தெரியும் நிழலும் தூரத்து
லாந்தர் விளக்கும் உறங்காமல்
கத்தும் மரத்தும்பிகளும்...
சப்தம் போடும் மின் கம்பிகளும் ....
பேச்சு துணைக்கேனும் யாரும்
வருவாரோ என்று நினைக்கையில்
அதிகம் பேசினோமோ என்று
தோன்றுதலை தடுக்க முடியவில்லை...

:::நாகராஜன்:::

முனி .... :::நாகராஜன்::::

முனி ....

மூணாம் கிளாஸ் முருகேசனை
முனி அடித்ததை ஊரே பேசியது!
காப்பு கட்டணும் என்றது ஒரு சாரார்
ஆனைமுடி அவசியம் என்றாள்
பூனை மீசை கன்னியம்மா ….
முனியப்ப சாமிக்கு நேரணும்
முன்சீப்பு ராமசாமி சொன்னது …
புளியமரத்தில் ஆணி அடிக்க
மரமேறி நாடான் சொன்னான் ….
முருகேசன் முகத்தில் பயம் பார்த்து
நிச்சயம் போன மாசம் தூக்கில்
தொங்கிய அருக்காணிதான் என்று
அடித்து சொன்னார் கிராமத்து மணியகார் ….
யாரும் சொல்லவில்லை முருகேசனும்
சொல்லவில்லை எந்த முனிஎன்று...
ஆனாலும் நிறுத்தவில்லை
வேலிக்குள் புணர்தலை
யாருக்கும் தெரியாமல்...
தலையாரியும் தாயம்மாவும்.....

:::நாகராஜன்:::

நாளை மரணம்....

நாளை மரணம்....

சேமித்ததெல்லாம் மனைவியிடம் சொல்லியாச்சு..
வரும் கடன் வராக்கடன் வாங்கிய கடன்
எல்லாம் மகன் மகளிடம் தெரிவித்தாச்சு..
ஏ டி எம் அட்டை பின் நெம்பர் கொடுத்தாச்சு
பேங்க் அக்கௌன்ட் EOS மாத்தியாச்சு
இன்சூரன்ஸ் தொகை அதிகப் படுத்தியாச்சு
பர்சில் உள்ள காசை பிச்சை போட்டாச்சு
பத்து வெள்ளை தாளில் கையெழுத்திட்டு
பையன் கையில் கொடுத்தாச்சு...
இனி ஏதும் பாக்கியில்லை செய்ய...
ஆனாலும் சாகத்தான் வேண்டுமா?

::::நாகராஜன்:::

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

கட்டுண்டு காவலுண்டு கையது பொத்தி மெய்யது அடங்க
பட்டுண்டு வாழ்வர் கண்டீர் - பெற்றது தண்டனையாய்
கூட்டில் வாழ்தலும் வழக்காய் மாறாது காண் கல்யாணம்
கட்டியவனும் கொட்டிலில் கைதியும்

:::நாகராஜன்:::

அன்பு நண்பர் திரு. கோவிந்தன் அவர்களுக்கு
தாங்கள் கேட்டபடி திரு. சீவரத்தினதிற்காக ஒரு சிலேடைக்கவிதை.
நன்றி


:::நாகராஜன்:::

காதல்....::::நாகராஜன்:::

காதல்

நீயே நானானதால் நானே நீயானதால்
நான் அங்கிருக்கிறேன் நீ இங்கிருக்கிறாய்
இடம் மாறுதல் பிழையல்ல பெண்ணே...
மாறாவிட்டால் இல்லை காதல் கண்ணே...

உறக்கத்திலும் உன்னை உணர்வேன் நீ
விழிக்காமலிருக்க நான் விழித்திருப்பேன்
உடல் வசமிழந்து தளர்கையில் நாளை
முடிந்தால் செய்வோம் என்பதிலிருக்கிறது காதல்..

தொடுவதில் படுவதில் உராய்வதில் இல்லை காதல்
கட்டுடல் தசைப் பிடிப்பு கவர்ச்சி வேண்டாம் காதலில்
எனக்கொரு தொல்லைஎனில் உன் கண் உகுக்கும்
என் தொல்லை உன்னிடம் சொல்லாமல் போகுமது காதல்

நாடி தளர்த்து நடை பிசகையில் துணையாய் வரும் உன் கை
ஆடி முடித்த நாட்களை அசை போடுகையில் உடன் உன் துணை
கிடக்கும் முன் நாளை பார்ப்போம் என்பதில் உண்டு காதல்
விதவையாய் நினைவுகளுடன் போராடித் தோற்பதில் உண்டு காதல்

:::நாகராஜன்:::

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மந்திரமாவதும் நீரே மண்ணாவதும் நீரே.....

மண்ணை மண்ணால் சுத்தமாக்கி
மண்ணால் நீரை சுத்தமாக்கி
நீரை நீரால் சுத்தமாக்கி
நீரால் மண்ணை சுத்தமாக்கி....

(The process of cleaning iron using sand - sand blasting
The process of removing suspended solids from water – Sand Filtration
The process of making pure water from sea water – Reverse Osmosis
The process of cleaning the silica ores using water – Washing
-The engineering process of removal of foreign materials)


அழுத்தத்தால் கரியை எண்ணையாக்கி
தீயால் எண்ணையை வெப்பமாக்கி
வெப்பத்தால் சக்தியை சக்கரத்திலிட்டு
உந்திப் போகும் உத்தியைத் தந்து....

(pressure creates organic carbonaceous petroleum oil
Fire ignites the petrol and heats up or expands gas
Heat energy converted to torque and transferred to gears
Gears connected to wheel renders motion
- The mechanism of automotive machines)

மண்ணில் தனிமம் வேகுவதும் தீயால்
வெந்தது குளிர்ந்ததும் காற்றால்
வந்தது வடிவானது வெளியால்
வெளியில் வந்ததை வளியில் நிறுத்தி..

(ores from soil are melted with fire
Melted metal is cooled by air
The moulded stuff is used as a structure
For launching the rockets
- The science of metal moulding)

ஒளியைக் கடத்த காற்று ஓர் ஊடகம்
ஒலியைக் கடத்தவும் காற்று ஓர் ஊடகம்
வளியே ஒரு ஊடகம் ஆகும்
வெளியே புலன் அறியாமல் போகும்...

(light is transmitted via the air particles
Sound is transmitted by ether in air
Atmosphere is the media of transmission of light and sound
Transmission of these powers never are visible
- the science of sound and light transmission)

மின்னில் உண்டு சூடும் தணிப்பும்
மின்னில் உண்டு காற்றும் மண்ணும்
தீயே குளிரை மாறும் வித்தை
குளிரே தீயாய் மாறும் விந்தை

(light produces heat and cold
Heat produces wind and metal fusion
Heat converts itself to cold
Cold itself is a form of heat
- Thermodynamics)

எல்லாம் உனது என்பதை அறிவேன்
தீயும் நீ மண்ணும் நீ காற்றும் நீ
நீரும் நீ வளியும் நீ எங்கும் எதிலும் நீ
நான் எனது என்றில்லாமல் நீ உனது என்றானதால்

ஒன்றிலிருந்தே மற்றது வருமென்பது விதி
ஒன்றை மாற்றினாலே மற்றதாகும்
ஒன்றை அழித்தாலே மற்றது உருவாகும்
ஒன்று என்பதே நீயாய் உனதாய் இருக்கையில்


:::நாகராஜன்:::

சீதைக்கு ராமன் சித்தப்பா!


சீதைக்கு ராமன் சித்தப்பா!

ராமனுக்கு மருமகன் முருகன், முருகனின் முதல் மனைவி
இந்திரன் பெண் தேவயானி, அவளோ சரஸ்வதியின் மருமகள்,
பிரம்மனின் பெண் பூமாதேவி ராமனுக்கு அண்ணன்
மகள் என்றால், சீதைக்கு ராமன் சித்தப்பாதானே ?

:::நாகராஜன்:::