மொத்தப் பக்கக்காட்சிகள்

18 ஜன., 2008

சென்னை என்னும் மாநகரம்....:::நாகராஜன்:::

விலைகொடுத்து வாங்கலின்றி வேறேதும் இல்லை
வியர்வைக்கு எந்நேரமும் பஞ்சமில்லை...

தெருவெல்லாம் ஜனக் கூட்டம்...
சந்து பொந்தெல்லாம் மூத்திர நாற்றம்...

கூவம் என்னும் பெருநகர் பேரோடை
நடைபதைக்குள் புகும் நகரப்பேருந்து...

அழுகின காய்க்கு ஜாம் பஜாரோ பாண்டி பஜாரோ..
ஆப்பம் பாயாவிற்கு தள்ளுவண்டி கையேந்திபவன்...

ஒழுங்கு வரிசையில் டாஸ்மாக்கில் மக்கள்
நெரிசலிலும் நகைவாங்கும் உஸ்மான் ரோட்டில் நங்கைகள்...

ஹார்ன் அடித்து அதிரவைக்கும் டூ வீலர்கள்
படிக்கட்டுத் தேய தார் ரோடு கீரலிட்டு பல்லவன் பஸ்...

புகுந்து புயலாய்ப் போகும் ஆட்டோ ரிக்க்ஷா ...
புகைக்குள் புதைந்த வீதிகள் தந்தது கண்ணெரிச்சல் மட்டும்...

வெளிநாட்டு சாமானை இன்னும் வாங்கும் பர்மா பஜார்
தேங்கியதை தலையில் கட்டும் நடைபாதை வியாபாரி....

தேடிச்சென்று காற்று வாங்கும் கடற்கரை கூட்டம்
திருட்டுக் கொடுத்து திரும்பி வர ரயில் வண்டி...

காணாமல் போய் திரும்பி வரும் கண்ணகி சிலைகள்
அடுத்த தலைவனுக்கு காத்திருக்கும் சமாதி வரிசை...

கெட்டும் பட்டினம் சேர்வதா இல்லை
கெட்டுப்போன பட்டினம் சேர்வதா?

ஒரு நாள் பயணத்தில் போதுமடா சாமி பட்டினம் ...
பிச்சை எடுத்தாலும் பரதேசம் பரதேசம்தான்....

::::நாகராஜன்::::

துணுக்குக் கவிதைகள் -ஷபீர் அஹ்மத்

சென்னை கடற்கரையில் ...

பிசசை கேட்டசிறுவனுக்கு ஒரு ரூபாய்மறுப்பு!
சுண்டல்காரனுக்குக்கொடுக்கும் போது
பறந்தே போயிற்றுபத்து ரூபாய் நோட்டு!!


மும்பை பஸ்ஸில்...

கர்ப்பவதிக்குஉட்கார இடம் இல்லயா?
கொடுத்துவிட்டுக் கேட்டேன்.
எத்தனை மாதம்?
அரை மணி நேரம்!

துபாய் ரோட்டில்....

நடந்து கொண்டிருந்த நண்பனை
காரிலிருந்து அழைத்தேன்.
வா. உனை drop செய்கிறேன்.
வேண்டாம்நான்
அவசரமாபோகணும்!

17 ஜன., 2008

காரணம்: :::::நாகராஜன்::::

சுடலை மாடனுக்கு நேர்ச்சையோ அல்லது
சூப்பர் ஸ்டாரின் புதுப்பட வெளியிடோ....

அப்பாவின் வசவுகளோ அல்லது
பரிட்சையில் பாஸோ பெயிலோ...

தலைவன் செத்ததோ அல்லது
தனியாகிப் போனதோ...

நண்பனுக்குக் கல்யாணமோ அல்லது
நீலாவிற்கு புனித நீராட்டலோ...

விடுமுறைக்கு வந்த விருந்தாளியோ அல்லது
வியாபாரத்தில் வந்த நஷ்டமோ...

காதலில் தோல்வியோ அல்லது
கட்டியவள் செய்யும் கொடுமையோ...

கிராமத்தில் திருவிழாவோ அல்லது
லாட்டரியில் அடித்த ஆயிரம் ரூபாயோ...

புதிய வீடு காட்டியதோ அல்லது
புதுக்குடித்தனம் போனதோ...

ஆயிரம் இருக்கு காரணங்கள்
சேர்ந்து நாம் சாராயம் குடிக்க.....

எந்தக் காரணமும் இல்லையென்றாலும்
இருக்கவே இருக்கு காரணமில்லாமை....

:::::நாகராஜன்::::

ஜார்ஜ் புஷ் வருகை: ஷபீர் அஹ்மத்

ஏகாதிபத்தியத்துக்கு
ஏகப்பட்ட வரவேற்பு இங்கே!

வெள்ளை மேனியில் மறைந்திருக்கும்கருப்பு
இதயத்துக்குசிவப்புக்கம்பளவிரிப்பு!

தீவிரவாதத்தைவிதைத்துவிட்டு
ஜனநாயகஅறுவடைகேட்கிறார்

ஆயுதங்களைஅனைவருக்கும்
விற்றுவிட்டுஅமைதி காப்பீர்
என்றுஅறிவுரைக்கிறார்

நீங்கள் என்நண்பர்கள்!
உங்கள் முதல்எதிரி
என் மூத்தநண்பன்!

அடிக்கும்அவனுக்கு
ஆயுதங்கள்பரிசு!காயம் பட்ட
உங்களுக்குஆலிவ் சிறகு!

சற்றுசிந்தியுங்கள்பெரியவரே!

உங்கள்நாட்டின்வயதை
விடஅதிக காலம்
அமைதிகாத்தபூமி இது!

இன்றைய நிலைமைஉங்களின்
எண்ணெய்தேவைக்கு
அப்பாவிகள்தரும்ரத்த விலை!

பயங்கரவாதத்தைமரபணு
சோதனைசெய்தால்கடைசியில்கிடைப்பது
உங்கள் பெயராகத்தான்இருக்கும்.

வல்லவர்களாய்இருங்கள்!
கொஞ்சம்நல்லவர்களாய்
இருக்கமுயலுங்கள்!

- ஷபீர் அஹ்மத்

காதலுக்கு மரியாதை: முஹம்மது எலியாஸ்

காதலுக்கு மரியாதை:

காதலித்தோம்! கருத்தொருமித்தோம்!!
மயிரிழையில் தப்பிப்யது எங்கள் காதல்!!
மணங்கோண்டோம் நாங்கள்!!
வெவ்வேறு நபர்களுக்கு!!

- முஹம்மது எலியாஸ்

16 ஜன., 2008

மண் மணம் மாறா விளையாட்டுக்கள்....:::::நாகராஜன்::::

எப்படித் தொடங்கியது என்று தெரியவில்லை
சிறுவயதில் தெரு ஓர விளையாட்டுகள்....

புதியதாகக் குடி பெயர்ந்தாலும் சட்டென்று
சேர்ந்து கொள்வது விளையாட்டில்தான்....

நல்ல நண்பனை அடையாளம் காட்டுவதும்
தெரு ஓர விளையாட்டில்தான் . ...

சில நாள் கோலி, சில நாள் பந்து எறி
கிட்டிப்புள், சில நாள் பம்பரம் ...

வெளியே வர முடியாத மழை நாட்களில்
கண்ணாமூச்சியோ அல்லது வார்த்தை விளையாட்டோ ....

கேலிக்கும் கிண்டலுக்கும் உதை அடிக்கும்
குறைவில்லை தெரு ஓர விளையாட்டில்...

பருவம் போல், மாறியது எப்படி
ஒரு விளையாட்டிலிருந்து மற்றொன்றிற்கு...

கிட்டிப்புள் பருவம் என்றால் போதும்
கிளைகளைத் தொலைக்கும் சில மரங்கள்...

பம்பரக் காலம் என்றால் மறக்கும் வீட்டுப்பாடம்
பிரம்படி முதுகில் இனிமையாய் வலிக்கிறது இன்றும் ...

திடீரென்றுத் தோன்றும் யாரோ ஒருத்தனுக்கு
கிரிக்கெட் என்னும் உன்னத விளையாட்டு....

தோணும் இடத்திலெல்லாம் குச்சி நட்டு
குறி பார்த்துக் குதிக்காத பந்தெறிந்து ..

வீதியில் போனவரை காயப்படுத்தி வேண்டாத
அயல்வாசியின் சன்னல் உடைத்து.....

எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா....
ஒலிம்பிக் ஈடுண்டோ இதற்க்கு?

கல் முளைத்த காடுகளில், நகரத்தின் நெருக்கமான குடித்தனங்களுக்கிடையில்...

டிவி கிரிக்கெட் பார்க்கும் என் மகன் ஒருநாள்...
கேட்டான் கிட்டிப்புள் என்றால் என்ன என்று....

அவன் இழந்த அனுபவத்தை விளக்க முடியாமல்
ஒரு நாள் முழுவதும் மனம் வலித்தது எனக்கு...

::::நாகராஜன்::::

15 ஜன., 2008

அண்ணன்! :::::நாகராஜன்::::

அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...

ஒரே ஸ்கூல் அடுத்தடுத்த வகுப்பறை
ஆசிரியன் அவனை அடித்தால்
வலித்தது எனக்கு

இருவருக்கும் பொதுவாய் நண்பர்கள்...
இருந்தபோதும் இருவரின் ரகஸியங்களும்
மறைமுகமாகவே இருந்தன...

அவன் சிகரட் பிடித்ததும்
கூடப் படித்தவளுக்கு கடுதாசி கொடுத்ததும்
எனக்குத் தெரியாதென்று அவன் நினைப்பு....

விடுமுறை நாட்களில் என்னை
வலுக்கட்டாயமாய் வயல் வெளி கிணற்றில்
தள்ளி நீச்சல் பழகிக் கொடுத்ததும்....

எதிர் வீட்டுப்பையன் சைக்கிள் விடுவதை
ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்
பழகிக் கொடுத்ததும் .....

விளையாட்டில் கூட இருந்தவன்
என்னை அடிப்பதைப பார்த்து வரிந்து கட்டி
அவனை சுற்றி சுற்றி அடித்ததும்....

பரிட்சையில் காப்பி அடித்ததால்
தலைமை ஆசிரியன் அண்ணனுக்கு டிசி கொடுத்ததை
அப்பாவிடம் மறைக்கச் சொல்லி மன்றாடியதும்....

ஒரு மழை நாளில் விதி முறை எல்லாம்
மாறியது போல அண்ணனை அப்பா தன்
பட்டறைக்கு உதவியாளனாக மாற்றியதும்...

அண்ணன் எனக்கு அன்னியனாகி
போனது அன்றுதான்....
அப்பாவின் காலத்திற்குப்பின் அண்ணன்
எனக்கு அப்பாவானான்.....

நான் பொறியியல் படித்து முடித்தபோது
நான் அறியாதது அண்ணனுக்கு
என்னால் ஏற்பட்ட கடன்கள்....

வேலைக்காக வெளிநாடு சென்ற
எனக்கு எப்படி எல்லாம் மறந்து போனது?

நான், என் சேமிப்பு என் சொத்து என் மனைவி
என் பிள்ளைகள் என்று எப்படி
என்னால் இருக்க முடிந்தது?

அண்ணன் எனக்கு இத்தனை நாள்
சொல்லாதது எல்லாம் ஒரே நாளில்
தெரிந்த போதுநான் உடைந்து போனேன்.....

அண்ணன் வழக்கில் பாதி விட்டதும்
மீதி வியாபாரத்தில் நஷ்டப்பட்டதும்
எப்படி எனக்குத் தெரியாமல் போனது....
என்ன ஆனது எனக்கு வெளிநாட்டில்?

அண்ணன் ஒரு நாள் தொலைபேசியில்
பேசினபோது குரலில் தெரிந்த
தன்மான்க்குறைவு என்னை
அடித்துப்பர்த்ததே?

அண்ணன் என் நண்பன்
அண்ணன் என் கடவுள்
அண்ணன் என் எல்லாம்
என்றபோதும் .....

என்னிடம் எல்லா வசதியும்
பணமும் இருந்தபோதும்

என் மனைவி அண்ணனுக்கு
கடன் கொடுக்காதே என்றபோது
என்னால் என் அவளை எதிர்த்துப்
பேச முடியாது போனதேன் ??

:::::நாகராஜன்::::

பொங்கலோ பொங்கல் :::::நாகராஜன்::::

ஆடி மாசம் பட்டம் விட்டோம்
விதைத்த நெல்லில் மரபணு மாற்றம்.....
முளைவிட்ட மூன்றாம் நாளில்
மரணத்தை மிதித்தது ....

மானம் பார்த்த விவசாயிக்கு
மான்யமில்லை ஆனால் பொழுது போக்க
மற்றவற்க்கு சும்மா கிடைத்தது
தொலைக்காட்சிப்பெட்டி

கல்லூரிக்கு பணம் கட்ட வக்கில்லை
வாலில் சடை பின்னி அழகு பார்த்த
வெள்ளைப்பசு கடைசிப் பெண்
அழ அழ அடிமாடாய்ப்போனது ....

மானம் பொய்த்தப்பின் மரியாதை போனது
வாங்கிய கடனுக்கு வட்டியாக
வங்கிக்குப்போனது வீட்டுப்பத்திரம்
தோட்டத்தில் மிஞ்சியது சாண நாற்றம்

முளைத்த நெல்லும் தண்ணீரின்றி வாடிப்போனது
வெட்டியெடுத்து விற்கலாம் என்றால்
வீதியெல்லாம் அனைவரின்
புல் மூட்டைகள்

கல்யாண வயதில் வீட்டில் ஒரு பெண்
கையாலாகாத தகப்பனைப் புரிந்து
தையல்காரனோடு ஓடிப்போனது
மழையின் தவறா?

கரும்பும் மஞ்சளும் கதையாகிப்போய்
கலிகாலத்தில் புயலடிக்கும் ஒரு தையில்
யாரோ சொன்னார் நாளை
பொங்கல் என்று....

தமிழன் நாகரிகம்.... பண்பாடு....
சோற்றுக்கு பஞ்சம் என்றாலும்
வாழ்த்துக்கு பஞ்சமில்லை

இஞ்சியின்றி கன்றுமின்றி
மாடுஇன்றி மஞ்சளின்றி
பரத்திப்போட்ட ஈரத்துணியின்
மறைப்பும் தாங்காமல்

பசியின் வெப்பத்தோடு
தமிழன் வயிறு
வேகமாய் வாழ்த்தியது
பொங்கலோ பொங்கல் என்று .....

:::::நாகராஜன்::::

அம்மா என்னும் அழகான கவிதை....:::::நாகராஜன்::::

அம்மா என் தேவதை....
அம்மா என் தெய்வம்....

அம்மா இல்லாதபோதுதான்
அவள் அருமை புரிந்தது.......

எத்தனை பொய்கள் நீசொன்னாலும்
அத்தனையும் கவிதை எனக்கு.....

வயிற்றில் இருந்து உதைத்தபோது
வலி பொறுத்து சிரித்தாயே அதுவா....

எவ்வித விஞ்ஞான அறிவுமின்றி
அப்பாவின் ஜாடை பிள்ளை என்றாயே அதுவா....

எத்தனையோ ராத்திரிகள் என்னை தூங்கச்செய்ய
நீ தூக்கம் தொலைத்தாயே அதுவா?

பால்குடி மறக்காமல் பிராயம் ஐந்து வரை
மார்பை கடித்த பொது பொறுத்துக்கொண்டாயே அதுவா?

அடுத்த வீடுப் பெண்ணுடன் விளையாடினால்
காது அறுந்துவிடும் என்பாயே அதுவா?

என் தேவைக்கு வேண்டும் என்று தெரிந்தே
உரிப்பானைக்குள் காசு ஒளித்து வைப்பாயே அதுவா?

காமாலை வந்தபோது உணவைக்குறை என்றான் வைத்தியன்
ஆனால் உண்ணாமல் உபவாசம் இருந்தது நானல்ல நீ...

அம்மை போட்ட உடல் வேகமாய் குணமாக ஈரத்துடன்
கோவிலில் எனக்காக உருண்டாயே அதுவா?

எந்த ஒரு நாளும் எனக்கு முன் நீ சாப்பிடாததை
சாமர்த்தியமாக மறைப்பாயே அதுவா?

பாடம் படிக்கும் என்னுடன் படிக்காத நீ
சமமாய் உட்கார்ந்து தூக்கம் சொக்குவாயே அதுவா...?

என்ன பட்டம் படிக்கப்போகிறேன் என்று தெரியாமலே
எனக்காக அப்பாவிடம் வாதாடுவாயே அதுவா?

புகை பிடித்த வாய் நாறும் போதும் பொறுத்துக்கொண்டு
என்னை உச்சி முகர்ந்து வழியனுப்புவாயே அதுவா?

வாலிப வயதில் வாழ்க்கை விளையாட்டிற்கு என் ஜோடிக்காக
அப்பாவிடம் அழகாக ஜோடிப்பாயே அதுவா?

எத்தனை இடங்களில் என் சந்தோசம் முக்கியம் என்று
கல்யாணப்பெண் பார்த்திருப்பாய்....

எத்தனை கற்பனைகள் உனக்கு
என்னை விட என் மனைவி பற்றி?

கல்யாணம் ஆனதும் என் முதல் சம்பளம் மனைவியிடம் போனபோது
நான் மிகவும் பொறுப்பென்று பூரித்தாயே?

மனைவி முகம் சுளித்தாள் என்று ஒரே நாளில் தீர்மானித்து
தனிக்குடித்தனம் வைத்தாயே....

அப்பாவின் உடலுக்கு கொள்ளி வைக்கத்தான் கூப்பிட்டாய்
அவரின் ஆஸ்த்மாவுடன் நீ மட்டும்தானே போராடினாய்?

யாருமின்றி தனியானபோது மனைவியின் வெறுப்பையும் மீறி
என்னோடு வந்தபோது சந்தோஷம் எனக்கு...

ஆனால் உன்னுடன் பேச வரும்போது உன்னை சுருக்கி
சமையல் அறையின் உள்ளே எப்போதும் பதுங்குகிறாயே அது ஏன்?

ஒவ்வொரு நாளும் அலுவலகம் போகும்போது விதவை எதிரே வரக்கூடாதென்று அடுப்படியில் ஒளிகின்றாயே அது ஏன்?

ஒருநாள் என் மகன் நடுநிசியில் விழித்து உறக்கம் கெடுத்தபோது என் மனைவியின் மடியில் நான் என்னைப் பார்த்தேன் ...

நீ மட்டும்தான் எனக்கு கடமை செய்திருக்கிறாய்
நான் உனக்கு ஒன்றும் செய்யவில்லையே?....

அம்மா! சுயநலத்தின் முன் கோழையாகிவிட்டேன்
வாழ்க்கை முழுதும் ...
புரிந்த பின் பிழை திருத்த நியில்லை உயிரோடு! ...

அடுத்த பிறவி ஒன்றிருந்தால் உன் தாயாய்
பிறந்து உன் கடன் தீர்ப்பேன்....

என் மனைவிக்கு இது எதுவும் புரியாது ..
உனக்கும் எனக்கும் உள்ள உறவு பற்றி....

ஆனால் ஒருநாள் புரியும் அவளுக்கு
தன் மகன் எழுதிய கவிதை படித்த போது!

:::::நாகராஜன்::::

திருவிழா ::::நாகராஜன்:::

கீற்றுக்கொட்டாய் திரையரங்கில் தோரணம் கட்டி
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்...

ஊர்க்கோடியில் சாராயப் படையல்
விறைப்பாய் இருக்கும் முனியப்ப சாமிக்கு

படையல் முடித்து முட்டக்குடித்த
சாமியாடிகள் அலங்கோலமாய் தரையில்....

ஆணின் கை தொட்டு வளையல் மாட்ட
கை நீட்ட மறுக்கும் கிராமத்துக்கிழவி...

எத்தனை சொல்லியும் அடங்காமல் பலுன் கண்டதும்,
சட்டென்று அழுகையை நிறுத்திடும் குழந்தை...

விரல்களை நக்கும் நான்கு சிறுவர்கள்
கைகளில் கலர் கலராய் மிட்டாய் கடிகாரம்....

புதிதாய் பூப்படைந்த பெண்ணின் முகத்தில்
யாப்பில் அடங்காத கவிதைச் சிரிப்பு...

வர்ணம் வாரித் தெளித்தது போல
வானம் முழுவதும் அக்னி மத்தாப்பூ....

கோவிலின் கொட்டு மேளத்திற்கும்
தலையாட்டும் பூம்பூம் மாடு...

அவள் விற்கும் புகையிலை போல்
வயதான பாட்டியின் முகச் சுருக்கங்கள்...

பிடிவாதமாய் ராட்டினத்தில் சுற்றும்
பிராயம் கடந்த பேரிளம் பெண்...

எம் ஜி ஆர் அட்டைகத்தி கட் அவுட்டுடன்
இவ்வருஷமும் மாறாதகருப்பு வெள்ளை ஸ்டூடியோ...

ஒழுங்கு முறை மாறாமல் ஒவ்வொரு
வருஷமும் எப்படித்தான் முடிகிறதோ...

ஒரு கிராமத்துத் திருவிழாவில்
ஒரே மாதிரி நிகழ்வுகள் ...

::::நாகராஜன்:::

தலைப்பில்லாக் கவிதைகள்: :::::நாகராஜன்::::

கொளுத்திப் போட்டேன் மரத்தின்மேல்
காடு இழந்தது ஒரு மரத்தை.......
கொளுத்திப் போட்டேன் மதத்தின்மேல்
நாடு இழந்தது மனிதத்தை ....
--------------------------------------------------------------
அவள் விற்கும் புகையிலை போல்
கிழவியின் முகத்தில் சுருக்கங்கள்
அத்தனை சுருக்கமும் அனுபவங்கள்....
---------------------------------------------------------------
குறி சொன்னார் சாமியார் எதிர்காலம் பற்றி
கூட இருந்த கைதிகளுக்கு....
--------------------------------------------------------------------
மின்னலுக்கும் வர்ணமுண்டோ?
இல்லை வானத்தில் மத்தாப்பூ...
-------------------------------------------------------------------
அரசியலுக்கு வர விருப்பமில்லை
தொலைக்காட்சியில் துண்டு காட்சியில்
தலை காட்டும் வரை ....
--------------------------------------------------------------------
வித விதமாய் துணிவகைகள்
நெய்தது கைத்தறி இயந்திரம்
கோவணத்துடன் நெசவாளி
--------------------------------------------------------------------
செட்டியார் ஒரு நாள் செத்துப்போனார்
வாய்க்கரிசி ரேஷன் கடையிலிருந்து....
--------------------------------------------------------------------
இருந்தவரை கவனிக்கவில்லை....
சுவற்றில் மாலை போட்டு மாட்டியாச்சு
அப்பாவின் நினைவுகளை.....
-------------------------------------------------------------------
யாரும் சொல்லித்தரவில்லை.....
சுபாவம்தான் அது சுவற்றில் சிறுநீர் கழிக்க நாய்க்கு....
-------------------------------------------------------------------
ஒரு வாய் தேநீருக்கு மருமகளிடம்
தெரிவிக்கத் தவித்தபோது புரிந்தது
இறந்துபோன மனைவியின் அருமை.......
--------------------------------------------------------------------
சட்டையில் கைவிட்டு திருடியபோதும்
தோன்றவில்லை அழுவதற்கு...
அப்பாவின் தேய்ந்த விரலிடையில்
மசிக்கரை காணும் வரை.......
-------------------------------------------------------------------
நான் நானாக இல்லை காதலித்த போது...
நீ நீயாக இல்லை கல்யாணமான பின்பு....
-------------------------------------------------------------------