ஆடி மாசம் பட்டம் விட்டோம்
விதைத்த நெல்லில் மரபணு மாற்றம்.....
முளைவிட்ட மூன்றாம் நாளில்
மரணத்தை மிதித்தது ....
மானம் பார்த்த விவசாயிக்கு
மான்யமில்லை ஆனால் பொழுது போக்க
மற்றவற்க்கு சும்மா கிடைத்தது
தொலைக்காட்சிப்பெட்டி
கல்லூரிக்கு பணம் கட்ட வக்கில்லை
வாலில் சடை பின்னி அழகு பார்த்த
வெள்ளைப்பசு கடைசிப் பெண்
அழ அழ அடிமாடாய்ப்போனது ....
மானம் பொய்த்தப்பின் மரியாதை போனது
வாங்கிய கடனுக்கு வட்டியாக
வங்கிக்குப்போனது வீட்டுப்பத்திரம்
தோட்டத்தில் மிஞ்சியது சாண நாற்றம்
முளைத்த நெல்லும் தண்ணீரின்றி வாடிப்போனது
வெட்டியெடுத்து விற்கலாம் என்றால்
வீதியெல்லாம் அனைவரின்
புல் மூட்டைகள்
கல்யாண வயதில் வீட்டில் ஒரு பெண்
கையாலாகாத தகப்பனைப் புரிந்து
தையல்காரனோடு ஓடிப்போனது
மழையின் தவறா?
கரும்பும் மஞ்சளும் கதையாகிப்போய்
கலிகாலத்தில் புயலடிக்கும் ஒரு தையில்
யாரோ சொன்னார் நாளை
பொங்கல் என்று....
தமிழன் நாகரிகம்.... பண்பாடு....
சோற்றுக்கு பஞ்சம் என்றாலும்
வாழ்த்துக்கு பஞ்சமில்லை
இஞ்சியின்றி கன்றுமின்றி
மாடுஇன்றி மஞ்சளின்றி
பரத்திப்போட்ட ஈரத்துணியின்
மறைப்பும் தாங்காமல்
பசியின் வெப்பத்தோடு
தமிழன் வயிறு
வேகமாய் வாழ்த்தியது
பொங்கலோ பொங்கல் என்று .....
:::::நாகராஜன்::::
15 ஜன., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக