கீற்றுக்கொட்டாய் திரையரங்கில் தோரணம் கட்டி
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்...
ஊர்க்கோடியில் சாராயப் படையல்
விறைப்பாய் இருக்கும் முனியப்ப சாமிக்கு
படையல் முடித்து முட்டக்குடித்த
சாமியாடிகள் அலங்கோலமாய் தரையில்....
ஆணின் கை தொட்டு வளையல் மாட்ட
கை நீட்ட மறுக்கும் கிராமத்துக்கிழவி...
எத்தனை சொல்லியும் அடங்காமல் பலுன் கண்டதும்,
சட்டென்று அழுகையை நிறுத்திடும் குழந்தை...
விரல்களை நக்கும் நான்கு சிறுவர்கள்
கைகளில் கலர் கலராய் மிட்டாய் கடிகாரம்....
புதிதாய் பூப்படைந்த பெண்ணின் முகத்தில்
யாப்பில் அடங்காத கவிதைச் சிரிப்பு...
வர்ணம் வாரித் தெளித்தது போல
வானம் முழுவதும் அக்னி மத்தாப்பூ....
கோவிலின் கொட்டு மேளத்திற்கும்
தலையாட்டும் பூம்பூம் மாடு...
அவள் விற்கும் புகையிலை போல்
வயதான பாட்டியின் முகச் சுருக்கங்கள்...
பிடிவாதமாய் ராட்டினத்தில் சுற்றும்
பிராயம் கடந்த பேரிளம் பெண்...
எம் ஜி ஆர் அட்டைகத்தி கட் அவுட்டுடன்
இவ்வருஷமும் மாறாதகருப்பு வெள்ளை ஸ்டூடியோ...
ஒழுங்கு முறை மாறாமல் ஒவ்வொரு
வருஷமும் எப்படித்தான் முடிகிறதோ...
ஒரு கிராமத்துத் திருவிழாவில்
ஒரே மாதிரி நிகழ்வுகள் ...
::::நாகராஜன்:::
15 ஜன., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக