மொத்தப் பக்கக்காட்சிகள்

16 பிப்., 2008

அடங்கா மனைவி... :::நாகராஜன்:::

அடங்கா மனைவி...

ஆனைப்பெரிதெனினும் அங்குசத்திற்கு அடங்கும்
பானைப்பெரிதாயினும் கயிற்றுரிக்குள் அடங்கும்
ஆறு பெரிதானாலும் அகண்ட கரைக்கடங்கும்
எதைக்கொண்டு கட்டிய பெண் அடங்கும்?

வலியவன் எத்தனை பெரியவன் ஆயினும்
மெலியவன் தாள் வீழும் நாள் வரும்
வலியவன் வெளியே பெரியவன் ஆனாலும்
விழுவது பெண்ணின் தாள் வெளியில் அறியார்

எறும்பூர கல்லும் குழியும்
ஏர் ஊற நெல்லும் விளையும்
சேர்ந்தூர தேரும் நகரும்
எது செய்தல் பெண் நகரும்...

நிலவில் அழுக்கிருந்தாலும் உலகிற்கு வெளிச்சம்
மெய்யில் தாள் வலித்தால் கண் உகுக்கும் நீர்
கொள்வார் இல்லையெனினும் காக்கை விரும்பும் வேப்பங்கனி..
சுயநலம் இல்லாது வாழ்ந்தும் புரியாதே உன் மனை..

தாழற்ற கதவில் வலுவில்லை கொண்ட
தலையற்ற பெண்டிர்க்கு வழ்வுமில்லை
உடல் தாக்க விரையும் தடியை எதிர்பார்ப்பின்றி
முன்னின்று கரம் சென்று காக்கும் விழும் அடியை...

காப்புளது குளம் கரையுளது ஆறு விரிந்து பரந்த
கடலுக்குண்டோ கரை? கணவனைப்பேனும் பெண்டிர்க்கு
காவலுண்டு என்றைக்கும் கண்டீர் இம்மாநிலத்தீர்
கண் அற்றவன் அஞ்சான் இருளைக்கண்டு...

நிலம் நீர் காற்று நெருப்பு பூதங்களிவை மாத்திரம்
இதில் சரிவிகிதம் உணர்தல் உயிரின் மந்திரம் - பூத
விகிதம் கலைந்தால் உயிர் மறையும் என்பதே விதி
உயிர் மறையும் உணர்வே இறப்பென்றுணர் மனையே...

:::நாகராஜன்:::

சிலேடைக்கவி....:::நாகராஜன்::;

சிலேடைக்கவி - ஒரு விளக்கம்.

ஒரே பாடல் இருவேறு பதங்களுக்கோ இருவேறு பொருள்களுக்கோ பொதுவாய் அமைவதை சிலேடை என்கிறோம். பண்டைய காலத்தில் கவி காளமேகப்புலவர் என்பார் மாத்திரம் இச்சிலேடைக்கவிதைகளை நமக்குத் தந்து போனார். அவர் காலம் போனபின் சிலேடைக்கவி வழக்கொழிந்து மரபுக்கவியும் புதுக்கவியும் மட்டும் அளவில் பெரிதாக உருவெடுத்தன. சம காலத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர் கி வா சகந்நாதன் மட்டும் சிலேடையை உரைநடையிலும் பேச்சிலும் உபயோகித்து மகிழ்வித்தார். வழக்கொழிந்த சிலேடைக்கவிக்கொரு வாழ்க்கை கொடுப்போம் . சில சிலேடைக்கவிதைகளை இங்கே நான் தொடுத்திருக்கிறேன். தமிழ் அறிந்த புலவர்கள் இலக்கண பிழை இருந்தால் எளியவனை மன்னிக்கவும். தயை கூர்ந்து தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால், திருத்திக்கொள்கிறேன். எளிமையான நடையில் புரியும்படி எழுதியுள்ளேன் . தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் மின் அஞ்சலில் அனுப்பி, எவ்வொப்பிலக்கிய சிலேடைக்கவிதையை மீண்டும் வளர உதவுங்கள்.

:::நாகராஜன்:::

அரசாங்கமும்... குதிரையும்...


வரியுண்டாதலால் நல்ல குடிதேர்வால் கோட்டையில் இருத்தலால்
நாற்காலியாதலால் மக்களைச் சுமப்பதால் - நன்னாட்டில் இனிய
கராமா வாழ் காளமேகம் நாகராசன் உரைப்பதைக்கேள்
அரசாங்கமும் குதிரையும் ஒன்றே.

பின் கால் இழுத்தலால் நாற்காலி வேட்டைக்காய் கூட்டமும்
ஓட்டமும் உண்டதால் கள்ளில் கொள்ளில் விருப்பமுண்டாதலால்
கராமா வாழ் கவிராயன் உரைப்பதைக்கேள் பிடரி உடைய
பரியும் அரசும் ஒன்றே என்று.

க(ட்)ச்சியுடையதாம் போர்புரிவதாம் புறங்காட்டுதலாம்
சட்டத்தின் முன் நிற்பதால் நேரெதிர் மோதுதலால் - மாளிகை வாசத்தினால்
கட்டிய மனைவியுடன் சண்டையிடும் கராமா வாழ் கவி சொன்னேன் கேள்
கொட்டிலில் கட்டும் குதிரையும் அரசும் ஒன்றேயாம்.

கழுதையும் ஊசியும் ...

சந்தில் நக அழுக்கெடுத்தலால் அங்கு தைத்தலால் பழுதுக்குதவுவதால்
துணிகளைச் சேர்ப்பதால் துளையுள்ள செவியுள்ளதால் - விருப்பமுடன்
காகிதம் சேரும் தொலையும்போது கால் பாதையில் கவனம் வைப்பதால்
கராமா காளமேகம் உரைப்பேன் கேள் கழுதைக்கு சமன் ஊசிஎன்று.

ஆலமரமும் புகைப்படமும்.

நிழலாவதால் சேனை அரசர் படையையும் உள்ளடக்குவதால்
விழுவதால் சட்டத்திற்கும் தோதாய் வெளிச்சத்திற்கு எதிரியாய்
பல்லுக்கு உதவியாய் இருப்பதால் கவிராயன் நாகராசன் உரைப்பேன்
தொல்லுலகில் ஆலமரமும் புகைப்படமும் சரிசமம் என்று..

:::நாகராஜன்:::

நன்றி நண்பர்களே! - தனமதவன்

மழையில் நனைந்தேன்
உங்கள் புதுக்கவிதைமழையில் நனைந்தேன்.

விட்ட உறவை
வீதியில் புதுபித்தோம்
இந்த வலை வீதியில் புதுப்பிதோம்!! .

நேரில் கண்டோம்
நெஞ்சார அணைத்தோம்!
நேரம் தெரியாமல் நெடு நேரம் பேசினோம்!! .

கூடினோம்! கொட்டமடித்தோம்!
கொண்டாடினோம்!!
கும்மலமிட்டோம்! கூட்டான் சோறும் உண்டோம். .

நாட்கள் கடந்து நான் இங்கே வந்தாலும்
நல்ல கவிதை பார்த்து
நெஞ்சம் உருகினேன் உள்ளம் மகிழ்ந்தேன்!
.
நன்றி நண்பர்களே!
உங்கள் பணி தொடரட்டும்
நாவில் சுவையூட்டும் நற்றமிழ் வாசிப்போம்
.
தனமாதவன்

கவிதைக்கழகு - ஷபீர் அஹ்மத்

கல்விக்கழகு கசடறக் கற்றல் நல்ல
கவிதைக்கழகு 'நச்'சென்று இருத்தல்
- ஷபிர் அஹ்மத்

பற்றறு....:::நாகராஜன்::;

பற்றறு....
(இவ்வடிகளுக்குக் கீழே விளக்கம் காண்க)

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
பற்றற்று ஆசை களைந்தவன் முனிவன்..

பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..

வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..

பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்

பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..

:::நாகராஜன்::;


1. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்:
கடல் நீரில் கரைந்திருப்பது உப்பு. ஆனாலும் கடல் மீன் கரிப்பதில்லை. உப்பு நீரைப்பற்றியிருந்தாலும் மீனைப்பற்றுவதில்லை. இது கடவுளின் இயல்பு.

பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்:
பூமி மற்றும் ஏனைய கோள்கள் ஆதாரம் இன்றி வளி மண்டலத்தில் மிதக்கின்றன. எந்தப் பிடிப்பும் இல்லாமல் அவைகளைப் பற்றி இயக்குபவன் அவன். இது மற்றொரு கடவுள் இயல்பு.

2. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
எதிலும் பற்று வைத்தவனும் பற்றுவ் வைக்கதவனும் ஆகிய இறைவன் அடி பற்றுக.

அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
ஆசையைத் துறந்து இன்மை மறுமை எனும் நிலை அடைவாயாக. (வீடு - சுவர்க்கம்)

3. பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
எதிலும் பற்றில்லாதிருக்க ஆடையையும் துறந்தவர்கள் ஜெயின் இனம் என்னும் சமணர் இனம்.
பற்றற்றுஆசை களைந்தவன் முனிவன்..
ஆசையைத் துறந்து மோகம் துறந்தவன் முனிவன்..

4. பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
இவ்வுலகில் கிடைக்கும் மூவகை துயர்தான் பணம், பாசம் மற்றும் மோகம்.
இறைவனை அறிய முடியாமல் நமக்குத் தடைக்கற்கள் இவை மட்டுமே. இம்மூன்றும் துறந்தால் ஞானம் வரும். பற்றற்ற நிலை வரும். இறைவன் வடிவமற்றவன். இறைவனை விவரிக்க மனிதனால் முடியாது. எனவே இறைவன் எப்படி இருப்பான் என்பதைக்காணாமல் அவனை உணர்தல் மட்டுமே மனிதனால் முடியும். மனிதன் படைத்த மதங்களில் மட்டும் இறைவன் வேறு வேறு. இறைவன் படைத்த உலகில் அவன் ஒன்று என்றே அறியப்படுகிறான்.

பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..
இறைவன் இருப்பது அடுத்தவன் மகிழ்வில். பசித்தவனுக்கு உணவிட்டால் இறைவன் உன்னுள் இருப்பதை உணர்வாய். வலியறியும் எவ்வுடம்பு நமக்கு என்றும் ஒரு துயரம் தான். வலியறியா நிலை அவனால் மட்டும் கொடுக்க முடியும்.

5. வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
ஆகையினால், பணம், பெண், மோகம் இவற்றால் வலி உணரும் இவ்வுடல் தேவையற்றது. மல சலம் சுமக்கும் இவ்வுடல் நிலையற்றது. ஒன்பது வாசல் உள்ள இவ்வுடல் வெளிப்படுத்தல் எல்லாம் கசடும் கழிவும் மட்டுமே. தெளிவாக அறிவீர்.

மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..
நம் உயிர் மற்றும் உடல் இரண்டும் வேறு வேறு. உயிர் நம் உடலைப் பற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் உயிர் தன் கூடு மாற்றிக்கொள்ளும். வலி உணரும் இப்பிறப்பு நமக்கு ஒரு இடறேயன்றி வரமல்ல என்று உணர்வீர்.

6. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.

7. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..


ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.