அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...
ஒரே ஸ்கூல் அடுத்தடுத்த வகுப்பறை
ஆசிரியன் அவனை அடித்தால்
வலித்தது எனக்கு
இருவருக்கும் பொதுவாய் நண்பர்கள்...
இருந்தபோதும் இருவரின் ரகஸியங்களும்
மறைமுகமாகவே இருந்தன...
அவன் சிகரட் பிடித்ததும்
கூடப் படித்தவளுக்கு கடுதாசி கொடுத்ததும்
எனக்குத் தெரியாதென்று அவன் நினைப்பு....
விடுமுறை நாட்களில் என்னை
வலுக்கட்டாயமாய் வயல் வெளி கிணற்றில்
தள்ளி நீச்சல் பழகிக் கொடுத்ததும்....
எதிர் வீட்டுப்பையன் சைக்கிள் விடுவதை
ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்
பழகிக் கொடுத்ததும் .....
விளையாட்டில் கூட இருந்தவன்
என்னை அடிப்பதைப பார்த்து வரிந்து கட்டி
அவனை சுற்றி சுற்றி அடித்ததும்....
பரிட்சையில் காப்பி அடித்ததால்
தலைமை ஆசிரியன் அண்ணனுக்கு டிசி கொடுத்ததை
அப்பாவிடம் மறைக்கச் சொல்லி மன்றாடியதும்....
ஒரு மழை நாளில் விதி முறை எல்லாம்
மாறியது போல அண்ணனை அப்பா தன்
பட்டறைக்கு உதவியாளனாக மாற்றியதும்...
அண்ணன் எனக்கு அன்னியனாகி
போனது அன்றுதான்....
அப்பாவின் காலத்திற்குப்பின் அண்ணன்
எனக்கு அப்பாவானான்.....
நான் பொறியியல் படித்து முடித்தபோது
நான் அறியாதது அண்ணனுக்கு
என்னால் ஏற்பட்ட கடன்கள்....
வேலைக்காக வெளிநாடு சென்ற
எனக்கு எப்படி எல்லாம் மறந்து போனது?
நான், என் சேமிப்பு என் சொத்து என் மனைவி
என் பிள்ளைகள் என்று எப்படி
என்னால் இருக்க முடிந்தது?
அண்ணன் எனக்கு இத்தனை நாள்
சொல்லாதது எல்லாம் ஒரே நாளில்
தெரிந்த போதுநான் உடைந்து போனேன்.....
அண்ணன் வழக்கில் பாதி விட்டதும்
மீதி வியாபாரத்தில் நஷ்டப்பட்டதும்
எப்படி எனக்குத் தெரியாமல் போனது....
என்ன ஆனது எனக்கு வெளிநாட்டில்?
அண்ணன் ஒரு நாள் தொலைபேசியில்
பேசினபோது குரலில் தெரிந்த
தன்மான்க்குறைவு என்னை
அடித்துப்பர்த்ததே?
அண்ணன் என் நண்பன்
அண்ணன் என் கடவுள்
அண்ணன் என் எல்லாம்
என்றபோதும் .....
என்னிடம் எல்லா வசதியும்
பணமும் இருந்தபோதும்
என் மனைவி அண்ணனுக்கு
கடன் கொடுக்காதே என்றபோது
என்னால் என் அவளை எதிர்த்துப்
பேச முடியாது போனதேன் ??
:::::நாகராஜன்::::
15 ஜன., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
கவிஞன் கற்பனைக் கண்ணாடியை கழற்றிவிட்டு அனுபவக் கண்களால் மட்டும் பார்க்கும்போது கவிதைகள் அழகாய் மட்டுமல்ல ஆழமாகவும் வெளிப்படுகிறது. நுணுக்கமான பார்வைகள்.
யதார்த்தமான வரிகள்.
வாழ்த்துக்கள்.
Shabir
கருத்துரையிடுக