எப்படித் தொடங்கியது என்று தெரியவில்லை
சிறுவயதில் தெரு ஓர விளையாட்டுகள்....
புதியதாகக் குடி பெயர்ந்தாலும் சட்டென்று
சேர்ந்து கொள்வது விளையாட்டில்தான்....
நல்ல நண்பனை அடையாளம் காட்டுவதும்
தெரு ஓர விளையாட்டில்தான் . ...
சில நாள் கோலி, சில நாள் பந்து எறி
கிட்டிப்புள், சில நாள் பம்பரம் ...
வெளியே வர முடியாத மழை நாட்களில்
கண்ணாமூச்சியோ அல்லது வார்த்தை விளையாட்டோ ....
கேலிக்கும் கிண்டலுக்கும் உதை அடிக்கும்
குறைவில்லை தெரு ஓர விளையாட்டில்...
பருவம் போல், மாறியது எப்படி
ஒரு விளையாட்டிலிருந்து மற்றொன்றிற்கு...
கிட்டிப்புள் பருவம் என்றால் போதும்
கிளைகளைத் தொலைக்கும் சில மரங்கள்...
பம்பரக் காலம் என்றால் மறக்கும் வீட்டுப்பாடம்
பிரம்படி முதுகில் இனிமையாய் வலிக்கிறது இன்றும் ...
திடீரென்றுத் தோன்றும் யாரோ ஒருத்தனுக்கு
கிரிக்கெட் என்னும் உன்னத விளையாட்டு....
தோணும் இடத்திலெல்லாம் குச்சி நட்டு
குறி பார்த்துக் குதிக்காத பந்தெறிந்து ..
வீதியில் போனவரை காயப்படுத்தி வேண்டாத
அயல்வாசியின் சன்னல் உடைத்து.....
எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா....
ஒலிம்பிக் ஈடுண்டோ இதற்க்கு?
கல் முளைத்த காடுகளில், நகரத்தின் நெருக்கமான குடித்தனங்களுக்கிடையில்...
டிவி கிரிக்கெட் பார்க்கும் என் மகன் ஒருநாள்...
கேட்டான் கிட்டிப்புள் என்றால் என்ன என்று....
அவன் இழந்த அனுபவத்தை விளக்க முடியாமல்
ஒரு நாள் முழுவதும் மனம் வலித்தது எனக்கு...
::::நாகராஜன்::::
16 ஜன., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக