மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

நொறுக்குத் தீனி.....

நொறுக்குத் தீனி.....

தீனிக்குப் பஞ்சமில்லை படிக்கும் காலத்தில்..
தேவைக்கும் மேல் வகையாய் கிடைக்கும்
வித்யாசமாய் வித விதமாய் கால மாற்றம்
ஒத்து ஒரொரு பொருளும் இனிய அனுபவம்...

வெல்லம் தேங்காய்ப் பூ சேர்த்த கமர்கட் உருண்டை
வெள்ளை நிறம் பூண்ட உப்பு/சீனிப் பணியாரம் சூடாய்
வெள்ளை முடி கிழவி விற்கும் வேகவைத்த குச்சிக் கிழங்கு
தள்ளு வண்டியில் பேர் தெரியாத புளித்த பச்சை நிறப் பழம்

சில நேரம் புதியதாய் சந்தைக்கு வரும் சிவப்பு மிட்டாய்
பெண் பிள்ளைகள் மிக விரும்பும் புளிப்பு ஆரஞ்சு கிளிப்பு
பச்சை புளியங்காய் எலந்தைப் பழம் நாவல் பழம் தேங்காய் பத்தை
உப்பு பொடி தூவி பற்களாய் சீவி விற்கும் மாங்காய் பத்தை...

எலந்தை வடை ஜியோமிதிப் பெட்டியிலிருக்கும்...
பழமும் பச்சை மிளகாயும் கலந்தரைத்து உப்பிட்டு
வடை தட்டி உலரவைத்துப் பின் முப்பது நாள் உண்ண...
எடைக்கு எடை சமமில்லை தங்கமானால் கூட....

விடுமுறை நாளில் நொறுக்கு தீனிக்காய் மனம் ஏங்கையில்
எடுத்தாள இருக்கவே இருக்கு புளியும் உப்பும் மிளகுப்பொடியும்
கலந்தெடுத்து கையில் உருட்டி குச்சியில் நட்டு கொஞ்சம்
கொஞ்சமாய் வாயில் உருட்டி நக்கியபின் ஊறும் எச்சில் விழுங்கி

சமையல் அறை நொறுக்குத்தீனிக்கு ஓர் வரப் பிரசாதம்
பொட்டுக் கடலையும் வெல்லமும் அல்லது பிடி அவலும்
இல்லையேல் கடலையுடன் தேங்காய் சேர்த்து உடனடி சட்னி
வாயில் அரைக்க ஏதுவாய் உடன் தின்னத் தோதாய்...

போதும் போதாததிற்கு வழியெல்லாம் இருக்கு யார் வைத்த மரமோ...
புளியங்காய் பழம் கோணல்புளி இல்லை கொய்யாவோ மாங்காயோ..
குறி பார்த்து கல் எறியத் தெரிய வேணும் ஆள் வந்தால்
எகிறி குதித்து ஓடத் தெரிய வேணும்...எத்தனை வித்தை இது?...

பசித்தபோது புளியடித்து தோட்டக்காரன் விழித்தபோது கிலியடித்து
கொய்யாவோ மாங்காயோ வெட்டுவதற்கு கத்தி வேண்டாம்
கையிலெடுத்து நல்ல தரையில் ஓங்கிக் குத்தினால் போதும்
இரட்டையாய் பிளந்து வடிவில்லாப் பத்தைகளை ருசித்து...

கிழவி விற்ற குச்சிக் கிழங்கில் தரம் பார்க்கவில்லை
பழம் மேல் மொய்த்த ஈக்களை கணக்கெடுக்கவில்லை
பெட்டிக் கடை மிட்டாயின் மேல் FDA முத்திரையில்லை
பற்றவில்லை எந்தப் பிணியும் ரோகமும் எமக்கு இதுவரை ....

நொறுக்குத்தீனி சரிதம் எமக்கு விட்டுச்சென்றது நினைவெனும்
நறுமணங்களை.. நினைக்கும்போதெல்லாம் இனிக்கும் கணங்களை
ஒரு விடுமுறை நாளில் பழையதை நினைத்து மகிழ்வுடன்
அசைபோட சில தடங்களை பதித்துச் சென்றது நொறுக்குத்தீனி....

பள்ளி விட்டு வந்த மகனிடன் பரிவுடன் கேட்டேன் அவன் உண்டதை....
வெளிநாட்டுப் பள்ளி, நொறுக்குத்தீனிக்கு வசதியில்லை... கொஞ்சம்
நூடுல்ஸும் பிஸ்ஸாவும் உச்சிக்கு உண்டேன் என்றான்... அவனதை
உண்டதால் எனக்குக் கிடைத்தது மண் மனத்துடன் இக்கவிதை..

:::நாகராஜன்::::

கருத்துகள் இல்லை: