மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008

எல்லாம் நீ சிவனே....

எல்லாம் நீ சிவனே....

கற்றாளை கற்றாழை எண்ணாது
கற்றாளின் நற்றாளைப் பற்றியால்
அற்றாளின் உற்றால் உண்டதால்
பெற்றாளின் உற்றது பொற்றாள்

வேசிதொட்டால் அறும்பற்றென
நீசனெனை பொருப்பற்றாக்கி
கடையில் உனை விருப்புற்றாக்கி
என்னென்பேன் எனை பற்றாக்கியதில்...

கெட்ட குடி தொட்டமுளை
அம்முட்ட நட்ட குழி
இம்முட்ட நீரிட்டலை நான்
அடித்தே தோற்பதென்னாளோ ?

இடைதடவி முலையருந்தி
பீக்குடல் மேலமர்ந்த்துருத்தி
புணர்ந்துணரும் சிற்றின்பக்
கழிவாயில் மறப்பதென்னாளோ ?

பட்டினத்து செட்டியைப்போல்
பலகொடுத்து நாயடியனை
நினைவெல்லாம் கசிந்துருக
செய்தவனை காண்பதென்னாளோ?

நூலில் ஊசிபோல நீரில் பாசிபோல
காசில் வேசிபோல காவில் தாசிபோல
காடேறும் உடலுடன் வாரா
பந்தம் அறுப்பது என்னாளோ ?

சீவனும் சிவனும் ஒன்றேயறி
உயிர் வேரறி வலியுடல் புறம் எறி
வரமும் வானமும் பெறவேன்றரி
உடல் ஒரு பழுதென்றேயறி


புழுத்து புழுதியில் போகுமுடல்
கரித்து எழுதீயில் வேகுமுடல்
இழுத்து சுழியில் போகுமுடல்
கழுத்தில் சுருக்கையில் போகுமுடல்

வாலறி வாலறு
பலனறி புலனறி
புரியும் அவனறி


வான் செயல் நாதன்
செயல்தானென்றறி

வாலறி புலனறி
பொறியறி புகலறி
வானறி விரியறி

கோளறி குறியறி
திரிமுனியறி
துணையறி பொறியே


மண்ணெடுத்து பசை கலந்து
எண்ணற்ற குழிசெய்து மண்ணை
தீயிட்டுப் பொசுக்கி கசடகற்றி
காற்றிட்டு கடினப்படுத்தி குழம்பினை
ஊற்றிட்டு வார்த்ததை நீரிட்டணைத்து
வானில் பறக்கவிட்ட ஞானமே
விஞ்ஞானமாம்....

மண்ணாய் தீயாய்
காற்றாய் நீராய்
வெளியாய் ஆகிய நீயே...

என்னை எடுத்து பற்று கலந்து
என்னில் மண்ணை நிறைத்து
சுட்டு ஊதி நீராட்டி வானில்
பறக்கவைத்து என்னில் உன்னை
உணர வைத்தது மெய்ஞானமா?

இல்லையெனில் ....

உன்னை உருக்கி வடித்து
உன்னை அறுத்து உன்னைக் கொண்டு
பொசுக்கி உன்னைக்கொண்டு வடித்து
நீயால் தணித்து உன் சக்தியை
உபயோகித்து நீயாய் நிற்கும்
காற்றை உருவாக்குதல் விஞ்ஞானமா?

நாதம் நீ பூதம் நீ
வேதம் நீ கீதம் நீ

அலையாய் சிலையாய்
அனலாய் கனலாய்
காற்றாய் ஊற்றாய்
அடியாய் முடியாய்
தளையாய் விளையாய்
தாயாய் தீயாய்
தந்தையாய் விந்தையாய்
ஒளியாய் ஒலியாய்
வழியாய் வளியாய்
மீனாய் மானாய்
மண்ணாய் விண்ணாய்
கண்ணாய் எண்ணாய்
அருளாய் பொருளாய்
மழையாய் விழையாய்
மதியாய் நதியாய்
விதியாய் கதியாய்
அரமாய் உரமாய்
மரமாய் சரமாய்

அகமாய் இகமாய்
ஏகமாய் ஊகமாய்
இணையாய் துணையாய்
அணையாய் கணையாய்

அணியாய் மணியாய்
கணியாய் தணியாய்
யாதுமாய் ஏதுமாய்
ஜோதியாய் வாதியாய்
ஆதியாய் நீதியாய்
எடுப்பதும் நீ அடுப்பதும் நீ
கொடுப்பதும் நீ தடுப்பதும் நீ

வரம் நீ கரம் நீ
புறம் நீ அறம் நீ

உன்னை எடுத்து உன்னை
வடித்து உன்னை பிரித்து
உன்னை வெட்டி உன்னை ஒட்டி
உன்னை அணைத்து உன்னை தகித்து
உன்னை வடிவாக்கி உன்னை கைமாற்றும்
வித்தை தந்தாய்

எல்லாம் நீ எதுவும் நீ
எதிலும் நீ எங்கும் நீ

நான் செய்யும் ஒரொரு பொருளிலும்
நீ தானென்று உணர்த்துகிறாய்

வான் பரந்து ஆளும் சிவனே
நான் என்பது நானல்ல
நீஎன்பதை உணர்ந்தேன் அல்லால்
நீ வடித்த இவ்வுடல் சிவனே
சிறிய நேரம் தங்கிடல் மட்டுமே
காற்று வாங்கி நீரடக்கி சிவனே
மண்ணுண்டு வெப்பம் சீராக்கி
உயிர் அடங்கும் கட்டிடத்தில்
தங்கிப் போகும் சிலநாளே...சிவனே

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: