காதல் காலம்....
நகம் கடித்து மணல் மேல் கோலமிட்டு கண் முன்
வரிசையாய் வந்து போவோரில் கவனம் வைத்து
மணி பார்த்து சிறுவன் விற்ற கடலை கொறித்து
விழிகளில் உன் உருவம் நிறுத்தி வழியெல்லாம்
கண் பதித்து நீ வரும் வரை பசித்திருந்து
வந்ததும் வழக்கிட்டு ஓய்ந்து நீ சொன்ன
காரணம் புரிந்தும் ஏற்காமல் உன் கண்
உகுக்கும் நீர் மட்டும் என்னை அமைதிப் படுத்தி
சமாதானமாகிப் பின் உன்னை முத்தமிட்டு
உடல் உணர்ந்து நீ உன் வழி நான் என் வழி….
எத்தனை இன்பமிருந்தது கண்ணே காதலில் …
இன்று நான் உனக்காக காத்திருக்கவில்லை…
நீயும் நான் வரவில்லை என்று உறங்காமலில்லை …
அடுப்படியில் குளிர்ந்த சமையல் எனக்காய் காத்திருக்க…
நானோ எங்கோ ஓர் உணவகத்தில் பசி தனித்துப் பின்
படுத்துறங்க மட்டும் கட்டிலில் காலியான இடத்தில்….
ஒருபுறம் என்னை நிரப்பி உறக்கத்தில்
உன் கை என் மேல் விழுகையில் புறம் தள்ளி
மறைக்க முடியாமல் உருளுதடி நான்
உகுக்கும் கண்ணீர் காதலை எண்ணி .....
:::நாகராஜன்:::
2 ஜன., 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக