மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

பல்லி விழும் பலன் .....

ஒரு வார விடுமுறை நாள் விதியை

மாற்றி அமைத்தது ஒரு பல்லி ....

வெள்ளி காலை தரையில் பத்திரிகை

விரித்து வெள்ளெழுத்துக் கண்ணாடியில்

பொடி எழுத்துகள் பெரிதாய் தெரிந்த

மாத்திரத்தில் பொட்டென்று ஒன்று

தலை மேல் விழுந்தது உணர்ந்தேன்

தத்தித்தாவி ஓடியது ஒரு பல்லி....

பூனை குறுக்கே போனாலே வீடு திரும்பி

தண்ணீர் அருந்தி அமர்ந்து போகும் நான்...

பல்லி விழுதல் பெரிய சகுனமச்சே விடுவேனா

அத்தனை சீக்கிரம் எடு பஞ்சாங்கம்...

அலறியபடி என் அடுக்கிழத்தியும்

அலறாமல் ஆளைக்கொல்லும் பெரியபெண்ணும்

(அடுக்கிழத்தி - வேலைக்குப் போகாத வீட்டு மனைவியின் சரியான தமிழ் பெயர்)

உடனடி உதவிக்கு ஓடி வந்தாலும்

பல்லி விழும் பலன் முன்னேயே அறிந்த

என் மனைவியின் அலறல் காரணம்

தலையில் விழுந்தால் உடனே மரணம்

என் முதல் பயம் எப்படி இறப்பேனென்று

பேருந்து விபத்தா, விஷ ஆகாரமா

கத்திக் குத்தா இல்லை தண்ணீரில் மூழ்கியா

நோய் வந்தா வராமலா நீரா நெருப்பா

மனம் தயாரானது விதியை சந்திக்க

எதற்கும் துணிந்தேன் எதிர்கொள்ள...

பேருந்தை தவிர்த்தேன் நடைபாதை உள் நடந்தேன்

கண்ட உணவுகளை உண்ணவில்லை

குடிநீர் காய்ச்சியது மட்டும் வெளியுணவு

வீட்டிற்க்குள் அனுமதியில்லை

இருட்டியபின் ஒற்றைக்கு வராமல்

வெளிச்சத்திலேயே வீடு திரும்பினேன்

வார விடுமுறைகளில் ஊர் சுற்றல் இல்லை

கடற்கரை இல்லை சுற்றுலா இல்லை

கோவில் இல்லை குளம் இல்லை, இதன் முன்

அறியாத புதிய மருந்துகள் சட்டையில் அவசரத்திற்கு

மாதம் ஒன்றானது பல்லி சொன்ன பலன்

கிட்டே வர விரும்பவில்லையா?

எதிர் மறையாய் ஏராளமான விளைவுகள்

தினமும் நடந்ததால் உடல் பதவிசானது

உணவு கட்டுப்பாட்டில் கொழுப்பு குறைந்தது

நேரக் கட்டுப்பாட்டில் பணியில் ஊதிய உயர்வு

பேருந்து தவிர்த்ததால் பயணச்செலவு மிச்சம்

வெளிச்சுற்று தவிர்த்ததில் பல மடங்கு லாபம்

பல்லி விழுந்ததில் பலனடைந்தவன் நான்

இனி பல்லி விழுந்தால் பலன் பார்க்கலாமோ?

வீட்டு தாழ்வார ஓரம் ஒரு சிறிய எலும்புக்கூடு

நடக்கையில் என் காலில் மிதி பட்டது

என் மனசு வேகமாய் சொல்லிக்கொண்டது

இது அதாக இருக்காது என்று...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: