மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

அப்பாவின் கைத்தடி.....

அப்பாவின் கைத்தடி.....

பலத்த மழையில் ஒதுங்கும்போதோ
ரயிலில் ஒற்றைக்கு பிரயாணிக்கையிலோ
தொடர்ந்து படிக்காமல் விட்டுப்போன
கதை போல அப்பாவின் நினைவுகள் வரும்...


அடித்தது முதலில் நினைவு வரும்
வெறுத்ததும் அழுததும் நினைவு வரும்
யோசிக்கையில் நாம் செய்த தவறு தெரிகையில்
அப்பாவின் மேல் பரிதாபம் வரும்.....

பள்ளிக்குக் கட்டணம் கட்ட கடைசி நாள்
இன்னும் இருந்தும் முன்கூட்டியே கட்ட
நிர்பந்தித்தது நினைவு வரும்....ஒரு நாளும்
எப்படி சமாளித்தாய் எனக் கேட்காததும் நினைவு வரும்...

கூடப் படித்தவன் போன கல்லூரியே வேண்டும்
என உன் வலியறியாமல் பிடிவாதம் செய்ததும்..
ஊரிலுள்ள கல்லூரி விட்டு ஒரு வண்டி தூரம்
யாத்திரை செய்து கல்வி கற்கச் சென்றதும்...

கல்லூரிச் சுற்றுலாவிற்கு காசு கேட்டு எழுதியபோது
நீ படும் கஷ்டம் அறியாமல் நான் கோபித்ததும்....
பதிலுக்கு நீ எதை விற்றாய் என்பதும் அறியாமல்
நான் உன் பணத்தை தண்ணியடித்து செலவழித்ததும்..

வெளியூரில் வேலைக் கிடைத்ததும் என்னோடு
தங்க நீ விரும்பியது புரிந்தும் ஒற்றையாய் நான்
நகரத்தில் சகல பாக்கியங்களோடு வாழ விரும்பி
உன்னிடம் நான் சொன்ன பொய்களை நீ நம்பியதும்...

உன்னை விட வசதி கூடிய பெண் வீட்டார்
என்னை மணம் பேச வந்தபோது, சற்றே
யோசிக்க நீ சொன்னதை, உன் பொறாமையாய்
எடுத்துக்கொண்டு பிடிவாதமாய் மணந்ததும்...

மாமனார் வீட்டில் மேல் படிப்பு படிக்க வைத்து
மச்சு வீட்டு மேல் மாடி எனக்காய் ஒதுக்கியபோதும்
உன்னை என் அருகில் வைத்துக்கொள்ள எனக்கு
ஒருபோதும் நினைவு வரவில்லை என்பதும்...

வாரம் தவறாமல் நீ எனக்கு கடிதம் எழுதியதும்
வருஷம் ஒருமுறை நான் பதில் எழுதியதும் .....
என்னை பார்க்க விரும்பியபோதெல்லாம் நான் வேண்டாமென
உனக்குச் சொன்ன ஆயிரம் காரணங்களும்...

அம்மாவின் சிதைக்கு கொள்ளி போட்டபின்
பாக்கியுள்ள நாட்கள் என்ன செய்யபோகிறாய் என
உன்னை நான் கேட்காமல் போனதும், நான்
கேட்காமலேயே கிராமத்தில் தங்க காரணங்கள் நீ சொன்னதும்...

யாரோ ஒருவன் என் கைபேசி எண்னைத் தேடியெடுத்து
நீ இறந்ததை சொன்னபோது, என் வெளி நாட்டு விசா
பிரச்சினைகளால் நாலு நாள் கழித்து வந்தபோது
உன் உடலை யாரோ அடக்கம் செய்ததும்....

பலத்த மழையில் ஒதுங்கும்போதோ
ரயிலில் ஒற்றைக்கு பிரயாணிக்கையிலோ
தொடர்ந்து படிக்காமல் விட்டுப்போன
கதை போல அப்பாவின் நினைவுகள் வரும்...

கூடவே எப்போதோ நீ என்னிடம் கேட்டும்
நான் வாங்கித்தராத கைத்தடியும் நினைவிற்கு வரும்...
நீ மறைந்த பின் உன் படத்திற்குக் கீழ் உள்ள
கைத்தடியைப் பார்க்கையில் தினமும் அழுகையும் வரும்...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: