ஏர் எழுபது!
ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
ஊரருகே சேர்ந்த நிலமுமாய், செய்வாரும்
சொற்கேட்டால் என்றும் உழவே இனிது.....
- ஏர் எழுபது செய்யுள்
ஏர் எழுபது என்பது தற்கால உழவு
குறித்து விவரமறியாத ஒரு உழவுப்
புலவனின் பெருமிதமான பழம்பாடல்.....
செய்யுள் கேட்ட எங்க ஊர் கிழவி
நரைமுடி கோதிச் சொன்னாள்
தம்பி உழவு பற்றி புதிதாய் எழுது....
ஏர் இருந்தது தேக்கு மரத்தில் ரெண்டு...
மாறிப் போச்சி...ஒண்ணு மணியகார் ஊஞ்சலாய்
மாணிக்கம் ஊட்டு கட்டிலாய் மற்றது
இரண்டாவது பொண்ணு வயித்துப் பேத்திக்கு
கடைசி பரீட்சைக்கு பீஸ் கட்ட அடி மாடாய்
கேரளா போனது ராமனும் பீமனும் .....
அடுத்த தெருவில் விளையாடிவிட்டு வந்த
பேரப் பிள்ளைகள் பசிக்கு கஞ்சி காய்ச்ச
வேறென்ன இருக்கு விதை நெல் தவிர....
காஞ்சிப் போன கால் ஏக்கரும் ஊர் ஓரத்தில்
கல்லு நட்டு பிளாட்டு போட்டு யாரோ வித்தாச்சு...
நல்ல புத்தி நமக்கு தோணாமல் போச்சு..
ஏர் எழுபது சொன்னது சரிதானுங்கோ..
கண்டிப்பாய் உழவு தேவையாயிருக்கு
சமயத்துக்கு விக்க உதவியாய்....
:::நாகராஜன்::::
2 ஜன., 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக