மோத்தலில் உதிர்ந்த
அனிச்ச மலரா
நீ?
ஒரு வீரனின்
விந்தில் வந்ததால்
உனக்கு
இம்முடிவா?
இனி எப்படி நான்
உறங்குவேன்?
கனவிலும் துரத்துமே
உன் கடைசி காட்சி?
பால்குடி மறந்திருக்குமா
உனக்கு? பாட புத்தகம்
சுமந்த உடலிலா
துப்பாக்கி ரவைகள்?
மரணத்தைக் கூட
முன்மார்பில்
வாங்கிய மாவீரன்
நீயல்லவா?
ஐந்து ரவைகளும்
உன் மார்பில்..
புறமுதுகு காட்டாத
போராளியின் மகன்....
எங்கே இருக்கிறாள்
உன் தாய்? கல்லறைகளை
கண்ணீரில்
கழுவிக்கொண்டா?
உன் மரணம் கண்டு
கண்டங்களும்
கண்டனங்கள்
கொடுக்கின்றதே?
கொஞ்ச காலம் முன்
செய்திருந்தால்
நீயாவது
மிச்சமாகியிருப்பாயே?
உன் கபடமற்ற
முகம் மறக்க
இன்னும் எத்தளை
நாள் பிடிக்கும்?...
ஒரு வீரப் பயிரை
நிராயுதபாணியாக்கி
கொன்ற எதிரிகளே
நின்று பாருங்கள்...
இவன் கையில் ஒரு
ஆயுதம் இருந்திருந்தால்
உங்கள் கூட்டமே
அழிந்திருக்கும்....
இவன் ஒருத்தி
மகனல்ல...
எம் இனத்தின்
இலச்சினை...
வீழ்ந்தது இலை
மட்டுமே...
வேர் இன்னும்
உயிர்ப்போடு இருக்கிறது...
இன்னும்
ஆயிரமாயிரம்
வீர விதைகளை
உற்பத்தி செய்தபடி.....
:::Dr. B.Nagarajan::::
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக