நாவிதன்....
மாதத்தில் ஓர் நாள் ஒதுக்கலாச்சு
மறைக்கும் முடியைச் சிரைக்க...
கிராமத்து நாவிதன் கடையது
விவரிக்க ஒரு அவசியமுமில்லை
ஒற்றை நாற்காலி கால் உடைந்து
தகரம் சுற்றி ஆணியடித்து கட்டப்பெற்று...
சணல் கட்டி தொங்கும் கண்ணாடி, ரசம்
போன இடம் பூகோள வரைபடத்தை நினைவூட்டி..
வெட்டிப் பேச்சாளர் தினசரி குண்டி
பொருத்தி குழிந்து போன நீள பெஞ்ச்சு..
சுவற்றில் சாவித்ரியின் சாயம் போன படம்
இல்லை மலைப் பாதை, மலை ஓடை ஓவியம்
அறை குறை ஆடையில் நடிகையின்
புகைப்படம் போன வருச காலண்டர்...
ஓரமாய் ஊதுவத்தி சொருகிய சுவர்
குழி புகை பட்டு வட்டமாய் கருத்து...
தவறாமல் தந்தியும் முரசும் கசங்கி
பெஞ்ச்சு மேல் பக்கங்களாய் பிரிந்து
தினசரி செய்தித்தாள் படிக்க வரும்
சனம் அரசியல் விவாதித்து பிரியும்
முடி சிரைக்க வருபவன் சேவகனாய்,
நாவிதன் உரைக்கும் மொழிகள் பதிவுகள்
குடும்பம் பற்றி விசாரிப்பு வெளியூர்
வேலைக்குப் போன தம்பி குறித்து கேள்வி
மழை தவறியதில் விசனம் நடிகையின்
கிசுகிசு அமெரிக்க போர் பற்றிக் கரிசனம்
கேள்வி கேட்டும் பதில் சொல்லியும்
மாளாமல் கூடவே கத்திரி சரியாய் செலுத்தி...
முகம் முழுதும் துடைத்து பிடி பொடி அப்பி
முன்னும் பின்னும் கண்ணாடி காட்டி
நாற்காலியில் அமர்ந்தவனை சிரித்து
வெளியே அனுப்பி அடுத்து அமர்பவனிடம்
கூடுதல் சேவை தாடி மழிக்க அஞ்சு
ரூபாதான் என வியாபார யுக்தி பலிக்காமல்...
இன்றைய நாளின் வருமானம் நாலு
பத்திரிக்கைக்கும் ஐந்து ஓசி காப்பிக்கும் ...
கொடுத்தது போக ஜேப்பில் மிச்சமானது ரூவா
எட்டு மாத்திரம் சில்லறையாய் குலுங்கும்...
இனி என்ன சொல்லி செட்டியாரிடம் அரிசி
இரண்டு படி கேட்கலாம் என மனசில்
கேள்வி வருகையில் அனாவசியமாய்
ஞாயிறு காலையில் கூட்டம் வரும் என நினைப்பும்...
செட்டியார் அரிசி கொடுத்தால் பின்னே எட்டு
ரூபாயில் நாலு ராயல் பூடான் வாங்கிப்
பார்க்கலாமோ எனும் நினைப்பையும் தவிர்க்க
முடியவில்லை நாவிதனால்...
:::நாகராஜன்:::
30 ஜன., 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக