மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

சிலேடைக்கவி- பழைய சோறும் சினிமா நடிகனும்

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும் காலையில்
தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே

விளக்கம்:

பாத்திரமது பற்றும் பழையதானால் புளிக்கும்
பழைய சோறு: பாத்திரத்தின் அடியில் தங்கும் பழைய சோறு பற்று எனப்படும், நாளான சோறு புளிக்கும்
நடிகன்: நடிக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடிப்பார், ஒரே மாதிரி நீண்ட நாள் நடித்தால் நடிப்பு புளித்துப் போகும்

சமயத்திற்குதவும் இரவில் நீரில் மூழ்கும்
பழைய சோறு: காலையில் உண்ண உதவும், மீந்த சோற்றில் நீர் ஊற்றி வைப்பார்
நடிகன்: நடிகர்கள் அவர்கள் சார்ந்த சாதிக்குதவுவார்கள், இரவில் குளிப்பார்கள் (அல்லது குடிப்பார்கள்)

காலையில் தெளியும் துணையுடனிருந்தால் சிறக்கும் கூட்டம்
பழைய சோறு: காலையில் பாத்திரம் திறந்தால் சோறு கீழேயும் நீர்த் தெளிந்து மேலேயும் காணும், ஊறுகாயின் துணையிருந்தால் உண்பதில் சிறப்பிருக்கும்
நடிகன்: காலை நேரம் தெளிவாக இருப்பார், துணை நடிகர்கள் உடன் நடிக்கையில் நடிகன் பாத்திரம் சிறப்பாய் விளங்கும்

ஈயென்று மொய்க்கும் நடிகன் சமம் பழைய சோற்றிற்கே
பழைய சோறு: சோற்றுச் சட்டியைத் திறந்தால் ஈக்கள் மொய்க்கும்
நடிகன்: நடிகனைச் சுற்றிலும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும் அல்லது எதாவது கொடை கொடு என்று கேட்டு சுற்றி வரும்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: