பற்றறு....
(இவ்வடிகளுக்குக் கீழே விளக்கம் காண்க)
பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்
பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
பற்றற்று ஆசை களைந்தவன் முனிவன்..
பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..
வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..
பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்
பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
:::நாகராஜன்::;
1. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்:
கடல் நீரில் கரைந்திருப்பது உப்பு. ஆனாலும் கடல் மீன் கரிப்பதில்லை. உப்பு நீரைப்பற்றியிருந்தாலும் மீனைப்பற்றுவதில்லை. இது கடவுளின் இயல்பு.
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்:
பூமி மற்றும் ஏனைய கோள்கள் ஆதாரம் இன்றி வளி மண்டலத்தில் மிதக்கின்றன. எந்தப் பிடிப்பும் இல்லாமல் அவைகளைப் பற்றி இயக்குபவன் அவன். இது மற்றொரு கடவுள் இயல்பு.
2. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
எதிலும் பற்று வைத்தவனும் பற்றுவ் வைக்கதவனும் ஆகிய இறைவன் அடி பற்றுக.
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
ஆசையைத் துறந்து இன்மை மறுமை எனும் நிலை அடைவாயாக. (வீடு - சுவர்க்கம்)
3. பற்றற்று ஆடை களைந்தவன் சமணன்..
எதிலும் பற்றில்லாதிருக்க ஆடையையும் துறந்தவர்கள் ஜெயின் இனம் என்னும் சமணர் இனம்.
பற்றற்றுஆசை களைந்தவன் முனிவன்..
ஆசையைத் துறந்து மோகம் துறந்தவன் முனிவன்..
4. பணம் பெண் பாசம் துற... படைத்தவன் ஒருவன் உணர்..
இவ்வுலகில் கிடைக்கும் மூவகை துயர்தான் பணம், பாசம் மற்றும் மோகம்.
இறைவனை அறிய முடியாமல் நமக்குத் தடைக்கற்கள் இவை மட்டுமே. இம்மூன்றும் துறந்தால் ஞானம் வரும். பற்றற்ற நிலை வரும். இறைவன் வடிவமற்றவன். இறைவனை விவரிக்க மனிதனால் முடியாது. எனவே இறைவன் எப்படி இருப்பான் என்பதைக்காணாமல் அவனை உணர்தல் மட்டுமே மனிதனால் முடியும். மனிதன் படைத்த மதங்களில் மட்டும் இறைவன் வேறு வேறு. இறைவன் படைத்த உலகில் அவன் ஒன்று என்றே அறியப்படுகிறான்.
பசித்தவனில் பரமனைப் பார்.. உணர் உடலே ஒரு இடர்..
இறைவன் இருப்பது அடுத்தவன் மகிழ்வில். பசித்தவனுக்கு உணவிட்டால் இறைவன் உன்னுள் இருப்பதை உணர்வாய். வலியறியும் எவ்வுடம்பு நமக்கு என்றும் ஒரு துயரம் தான். வலியறியா நிலை அவனால் மட்டும் கொடுக்க முடியும்.
5. வலியறியும் மெய் வேண்டாம், தெளியறி நீவிர்,
ஆகையினால், பணம், பெண், மோகம் இவற்றால் வலி உணரும் இவ்வுடல் தேவையற்றது. மல சலம் சுமக்கும் இவ்வுடல் நிலையற்றது. ஒன்பது வாசல் உள்ள இவ்வுடல் வெளிப்படுத்தல் எல்லாம் கசடும் கழிவும் மட்டுமே. தெளிவாக அறிவீர்.
மெய் உயிர் வேறென்று, பிறப்பொரு துயரென்று..
நம் உயிர் மற்றும் உடல் இரண்டும் வேறு வேறு. உயிர் நம் உடலைப் பற்றிக்கொண்டிருக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் உயிர் தன் கூடு மாற்றிக்கொள்ளும். வலி உணரும் இப்பிறப்பு நமக்கு ஒரு இடறேயன்றி வரமல்ல என்று உணர்வீர்.
6. பற்றில் பற்றில்லாதவன் பரம்பொருள்
பற்றில்லாததை பற்றியவன் பரம்பொருள்
ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.
7. பற்றற்ற பரம்பொருளைப் பற்றிடு...
அற்றது பற்றாக்கி வீடு உற்றிடு..
ஏற்கனவே விளக்கம் தந்துள்ளேன்.
16 பிப்., 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக