மொத்தப் பக்கக்காட்சிகள்

15 பிப்., 2008

கடவுள் வந்திருந்தார்...:::நாகராஜன்:::

கடவுள் வந்திருந்தார்...

காலம் பல கடந்தாலும்
கடவுள் இங்கே வந்திருந்தார்...

கூப்பிட்டதும் வாராமல் காலம் கடந்தே
வந்தார்... கடமை நிறைய இருந்ததென்றார்...

கடவுளுக்கில்லை கையும் காலும்..
காலண்டர் அச்சில் நான் கண்டது போல...

கடவுளுக்கில்லை மெய்யில் வடுக்கள்
கடவுளுக்கில்லை வெறும் கை மட்டும்...

கடவுள் இல்லை ஆண் பெண் வடிவாய்..
கடவுள் இல்லை உயர்த்திய கைகளாய்..

கடவுள் வந்தார் ஓர் ஒளி வடிவாய்... முகமில்லை
அவர்க்கு... இடையில் மொழியில்லை எமக்கு ..

ஒளி ஊடகம் சென்றது என்னுள்ளே.. என்
உள்ளம் உணர்ந்தது கடவுள் மொழி..

மௌனமாய் இருந்தோம் சில மணித்துளிகள் ..
கேட்பதைக் கேள் என்றார் நம் கடவுள்...

எங்கே இருக்கிறாய் நீ என்றேன்...வானத்தில்
இருக்கிறேன் எனவில்லை அவன்...

விளித்தால் ஏன் வருவதில்லை என்றேன்
விளிப்பவர்க்கு இல்லை தகுதி என்றான்...

உன்னை எங்கே காண்பேன் இனி என்றேன்..
காணும் இடம் என்று ஒரு பட்டியல் தந்தான்...

ஏழைக்கு இடும் உணவில், ஒரு குழந்தையின்
சிரிப்பில், வறியவனுக்குதவும் வழிமுறைகளில்..

பெற்றோர் இழந்த பிள்ளையில், கணவனில்லாப் பெண்ணில்
ஏய்ச்சிப்பிழைக்கா எஜமானன், ஏமாற்றாத மாந்தரிடம்,

கற்றுக்கொடுத்த குருவிடம் பெற்ற வயிற்றுக் கருவிடம்
பற்றில்லா பக்தனிடம் சிற்றின்பம் அற்றவனிடம்..

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவன்
தாரம் இழந்த பெண்ணை மதித்தவன்

பட்சி மிருகத்தோடு பகையற்றவன், பணத்திற்காய்
பாசம் கொடுக்காதவன், பெற்றவரை மறக்காதவன்

கல்விக்கு உதவியவன், கடமைக்குத் தயங்காதவன்
வலி உணர்ந்த வலியவன் வழக்காடப் போகாதவன்

வாக்கில் சுத்தம் உண்டானவன் வேசிக்கு உதவியவன்
வாய்மையின் வலிமையை உணர்ந்தவன்

பகைவனை நேசித்தவன் பசியறிந்து கொடுத்தவன்,
பாத்திரம் அறிந்து பிச்சையிட்டவன்

அடுத்தவன் மனையை விரும்பாதவன்
ஆலய சொத்தை அபகரிக்காதவன்

உருவின்றி அருவிலும் அருவற்ற
உருவிலும் புல்லாய் பூண்டாய் புழுவாய்

மரமாய் மீனாய்ப் பறவையாய் பாம்பாய்
விலங்காய் மனிதனாய் பூதமாய்..

வானாகி மண்ணாகி ஒளியாகி வளியாகி
ஊணாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்..

ஒலியாகி வழியாகி விருத்தமாய் செய்யுளாய்
விதியாய் விளக்கமாய் விளங்காமலாய்

அத்தனை இடத்திலும் என்னைப் பார்ப்பாய்...
புத்தனை போல் அந்தச் சித்தனைப் போல்..

இங்கெல்லாம் தேடாமல் வேறெங்கும் தேடாதே...
இங்கில்லைஎன்றால் எங்கும் இல்லை மறவாதே...

புரிந்தது எனக்கு.. புரியவில்லை எனக்கு..
ஒளி மறைந்தது ஓரிரு நிமிடத்தில்....

கடவுள் வந்திருந்தார்... என் கண்களைத் திறந்திருந்தார்..
எங்கும் இருக்கிறேன் என்றது இதுதானோ?....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: