மொத்தப் பக்கக்காட்சிகள்

14 பிப்., 2008

வா... கவிதை எழுதுவோம்... :::நாகராஜன்:::

வா... கவிதை எழுதுவோம்...

படிக்கும் காலத்தில் தளையும் வெண்பாவும்
தலையில் ஏறவில்லையா இல்லை தமிழ் பிடிக்கவில்லையா?

அடுத்தவன் கவிதை மனதை துளைக்கும்போது
கை பரபரத்து கவிதை எழுத துடிக்கிறதா?

வா... கவிதை எழுதுவோம்... உனக்குள் உணரும்
உணர்வுகளுக்கு வரி வடிவம் கொடுப்போம்...

மனசு உணர்ந்ததை வரிக்குள் கொண்டு வா..
பிறப்போ இறப்போ பூப்படைந்ததோ புஷ்பித்ததோ..

பிரிவோ சந்திப்போ பிள்ளையோ பெருமையோ
கடவுளோ தாசியோ மனிதனோ மிருகமோ..

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் யாவும் மற...

கைக்கு வந்ததை கிறுக்கிப்பார்,...
கிறுக்கிய வாக்குகளை குறுக்கிப்பார்....

வரிகளின் முதல் வாக்கு முக்கியம்....
ஒலிக்க வேண்டும் ஒரே மாதிரி அவை..

குறைக்கு குரையும் நிறைக்கு நிரையும்
எழுத்துக்குக் கழுத்தும் யானைக்குப் பானையும்...

எண்ணிப்பார் எத்தனை வாக்குகள் அறிவாய் நீ...
அத்தனையும் வரிசையாய் வரியாக்கிப்பார் ...

முடியும் வாக்குகள் அனைத்தும் மோனை என்பார்..
மோனைக்கும் எதுகைக்கும் அதே இலக்கணம்....

முடியும் வாக்கிற்கும் வார்த்தைகளை விரி...
படியும் என்றால் விடியும் மாலைக்குக் காலை...

எதுகையும் மோனையும் உனக்குக் கீழ் படிந்தால்
சந்தமும் படிமமும் உன் வசப் படும்....

பின் ஒரு வரிக்கு நான்கு நான்காய் வார்த்தைகள்..
முன் அனுபவம் வேண்டாம் கவிதைக்கு...

இரு வரி கவிதை வெண்பா...நான்கு வரி செய்யுள்
ஆறுவரி விருத்தம் அளவில்லா வரிகள் இலக்கியம்...

எதுகை மோனை சந்தம் படிமம் நான்கும்
இருந்தால் நீயும் ஒரு கவிஞன்....

தமிழ் உன் தாய்.. பிழை செய்தாலும் பொறுப்பாள் ...
எழுது அவளை கணினியிலோ அல்லது கவிதையிலோ...

உணர்வுகள் அவசியம் கவிதைக்கு.. உணர்ந்ததை
வரிக்குள் ஊசி போல செலுத்து, செம்மைப்படும் உன் கவி...

மொழியோ வார்த்தைகளே வேண்டாத ஒரு சில கவிதைகள்
எண்ணியதுண்டோ எப்போதேனும்.. கீழே பார் சிதறியதில் சில....

தளை மரபு சீர் சந்தம் விருத்தம் பா அணி
யாப்பு லுகரம் லிகரம் குறுக்கம் எதுவும் வேண்டாம்..

குழந்தையின் சிரிப்பு, ஒரு கூடை நிறைய பூக்கள்
கிழவியின் கனிவு, மழைக்குமுன் சில நொடிகள்...

யானையின் அசைவு, ரயிலின் கடப்பு
மார்கழி காலைக் குளிர், மனைவியின் அரவணைப்பு...

காதலியின் முத்தம், கடல் அலையின் சத்தம்
பிரிந்து சேர்ந்த தாய் சேயின் அழுகை..

வருஷக் காலண்டரின் காகிதப் படபடப்பு..
வரிக்குதிரையின் நிறம், வாரி சுற்றிய பெண்ணின் முடி..

குழந்தையின் கையில் காற்றாடி, கிழவனின் பொக்கை வாய் சிரிப்பு..
வறுமையிலும் சொந்தங்களோடு நடைபாதைக் குடும்பம்...

வா, உணர், வந்து எழுது, பேனாவில் தமிழ் மை நிரப்பு...
வெளியே கொட்டும் வரிகளும் கோடும் கவிதைகளாகட்டும் ...

முயன்று பார்...முடியும் உன்னால்... வா இங்கே
உட்கார்… ஒன்றாய்ச் சேர்ந்து கவி எழுதுவோம்...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: